Wednesday, 22 August 2018


மயிற்பீலி
(சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது)

                        Publishing in S L A T E Magazine
                                       (The Popular Indian Art Magazine)
                                         Thank you:  Lakshmi Manivannan

                                              Thank you: Bala Ilampirai
                                          ஜீவ கரிகாலன்


(ஞானப்பிரகாசம் ஸ்தபதி)



  “ஓவியம் பற்றி போன வருடமெல்லாம் இப்படி ஒரு வரி எழுத முடியுமா?’’ என்று என்னால் யோசித்துக் கூட பார்க்க இயலவில்லை. இன்று நான் இதை எழுத முடிந்தமைக்கு தமிழில் வரும் முக்கியமான படைப்புகளை வாசித்தலோடு அதன் ஓவியங்கள் குறித்து நண்பர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி தொடர்ந்து நடந்த பல உரையாடல்களே காரணம் எனலாம். அவரது ஓவியங்கள் குறித்து எழுதுவது, நான் விருப்பத்துடன் எடுத்துக் கொண்ட பணி என்று சொல்லிட எனக்கு மகிழ்ச்சியே

நான் ஏன் இதை எழுத வேண்டும் ?
இலக்கியம் குறைத்து பேசப்படும் பொதுவெளிகளில் எல்லாம் ஒரு மிகப் பெரிய காலியிடம் ஒன்று இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். சமகால இலக்கியத்தில் தேர்ந்த முக்கிய நபர்கள் கூட ஓவியம் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஒரு எழுத்தாளனுக்கு ஓவியத்தினோடு இருக்கும் தொடர்பின் எல்லைகள் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன. மேலை நாடுகளிலோ ஓவியங்கள் தான் பல சித்தாந்தக்களுக்கும், சமூக மாற்றங்களுக்கு முன்னோடியாக சமிஞைகள் செய்தன, படைப்பிலும், வாழ்வியலிலும் அத்தனை இயங்களையும் ஓவியமே தெளிவாக வகுக்கின்றன. இப்படியெல்லாம் நான் உணரும் போது கூட, இன்றளவும் ஓவியம் எனும் அடர் வனத்திற்கு வெளியே தான் நிற்கிறேன், என்னிடம் இருந்த ஓவிய அறிவு என்பது வெறும் பிரதி எடுத்தலாகவே இருந்து வந்திருந்தது. ஒரு மரப்பாச்சியின் நிர்வாணத்தை பால்யத்தில் கடந்த எனக்கு விலகி இருக்கின்ற ஆடை நிர்வாணத்தை கற்பனையாக்கியது. கற்பனை என்றால் வெறும் கற்பனையே, குழந்தை என்றுமே அறிந்திராத பறக்கும் கம்பளத்தின் உற்சாகமாக மட்டுமே நிர்வாணம் இருந்து வந்தது. ஆனால், இப்போது இல்லை. நான் ஓவியத்தை வாசிக்கிறேன், நுகர்கிறேன். அந்த நுகர்வின் நீட்சியாக இதை ஆவணப் படுத்தும் முயற்சியே இந்தக் கட்டுரை. அது மட்டுமின்றி ஓவியம் குறித்த விவாதங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், சம்பாஷனைகள் யாவும் நம் இலக்கிய சூழலில் மிகக் குறைவாக இருக்கின்றன.

எனக்குத் தெரிந்த கவிஞர் அவர், தொடர்ந்து எழுதும் அவருக்கு ஓவியம் மீது ஈடுபாடு அதிகம். அவர் கவைதகளிலும் சில காட்சிகளை வரிகளாக எழுதுவார், சில சமயம் ஒன்றன் பின் ஒன்றாய் வரும் வரிகளில் ஒரு ஓவியம் கொண்டுவரப் படும். அவரிடம் இதைப் பற்றி பேசுகையில் சில நேரம் தாம் எழுதும் சொற்கள் ஓவியமாக இருக்கும் என்பதையும், சில நேரம் தான் பார்க்கும் ஓவியங்களில் தங்கி விடுதலால் ஏற்படும் விளைவாக கவிதைகள வருகின்றன என்றும் சொல்வார். இதைப் போல ஓவியத்தைப் பார்த்தும் சில கவிதைகள் வரைகிறேன் என்று சொல்லும் படைப்பாளிகள் குறைவு, ஓவியங்கள் தன் கவிதைகளுக்கு உப பொருளாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர்.


ஓவியம் மனிதனின் ஆதி மொழி, அது அவன் வரலாற்றிற்கு பரிசளித்த முதல் ஆவணம். அன்றைய அடுத்த தலைமுறைக்கு செய்தி சொல்ல விரும்பிய குகைவாழ் மனிதன் தீட்டிய கோடுகள் தான் இன்றைய உலகில் வாசனை தரும், ஒலி எழுப்பும், வலி தரும், சுவையூட்டும் ஓவியங்களாக நமக்கு புலனாகிப் பரிணமித்துள்ளன. குகைகளில் வாழ்ந்த மனித இனம், மற்ற உயிரனங்களோடு ஒப்பிட்டு தன்னை உயர்ந்தவனாக கருதக் காரணமே அவன் சக மனிதனுக்கு சித்திரங்கள் மூலமாக சொல்ல முடிந்த செய்தி தான். இன்றும் கூட மொழி செயலிழக்கும் அல்லது மெளனிக்கும் இடங்களிலும், சில காலி இடங்களையும் நிரப்புவது ஓவியங்களே!!

சொல் என்பதும் சித்திரமே, சொல் என்ற குறியீடு மனதில் ஒரு சித்திரத்தின் பிம்பம் தருகிறது என்பதை உணர முடிகிறதா?,பூ “மழைஎன்ற சொல்லை உணர்வதற்கு முன் நம் மனம் வரையும் சித்திரங்களை கவனிக்க முடிகிறதா, சமஸ்கிருதத்தை அக்‌ஷரம் என்று சொல்லி தனியிடம் கொடுக்கும் உளவியலும் இது தான். குறிப்பிட்ட“பெரு கோடுகள் எனும் விடை தெரிய முடியாத பிரம்மாண்ட ஓவியங்கள் கூட நம் உலகத்திலிருந்து வேறு ஒரு உலகத்திற்கு செய்தி சொல்லப் பயன்பட்டவையே. பல ஆயிரம் ஆண்டுகளாய் தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்த ஓவியம் எனும் மொழி, இன்று நவீன உலகில் பேராற்றலோடு இலக்கியம் தாண்டியும் அரசியல், அறிவியல் என்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

மதப் படையெடுப்புகள், தொழிற் புரட்சி, இரண்டு உலகப் போர்கள், நவீன இலக்கியங்கள், நவீன மத அமைப்புகள் என்ற புறவெளிகளின் தாக்கத்தில், ஓவியங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை மாறுதலுக்குள்ளாக்குகிறது. வரலாற்றின் பெரும் பகுதி மாற்றங்களை நாம் ஓவியங்கள் கொண்டே ஆவணப் படுத்த முடியும். மற்ற கலைகளைப் போல் அல்லாது ஓவியத்திற்கான ரசனை என்பது தனியாகப் பிரிந்து போய்விடவில்லை. ஒருவன் எல்லோரா, தஞ்சை, இதிகாச ஓவியங்களையும் ரசிக்கலாம், மிச்சாலாங்கோ, டாவின்சி, பிக்காஸோ ஓவியங்களையும் ரசிக்கலாம், பாறை ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், கேன்வாஸ் , ஆயில் பெயிண்டிங் , சுவர் ஓவியங்கள் என்றும், கார்டூன்கள், நவீன ஓவியங்கள் என்று எதையும் ரசிக்க முடியும், ஆனால் நமக்கு நாமாக புரிதல்என்றப் பெயரில் கட்டிய மாயத் திரையில் தான் நவீன ஓவியங்களுடனே நம்மால் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது என்பது நிதர்சனம். ஓவியம் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தருவது என்பது ஒரு படைப்பாளிக்கு விதிக்கப்படும் துயரமான நிலை. இன்றைய நவீன யுகத்தில் முக்கிய ஓவியங்கள் ஒன்றும் புரிதலைக் கோலமாக வைத்துக் கொண்டு இடையிடையே புள்ளிகள் வைக்கும் வித்தை அல்ல.


ஒரு ரசிகனாக படைப்பை ஆராய்வது அலாதியானது, எந்த கோட்பாடு, தேற்றங்கள், படிம அறிவு தேவையற்று, ஒரு வாசிப்பை மட்டுமே நுகர்வுப் பண்பாக வைத்து ஒரு புத்தகம் வாங்கி அதில் தன் சொந்த மனநிலையிலோ, இல்லை சில சமயம் படைப்பாளனிடம் ஒத்துப் போன கணத்திலோ பல பரிமாணங்களை வாசகனாகவே கண்டெடுப்பது ரசனையின் முக்கிய இயல்பு.

இப்போதெல்லாம் ஓவியங்களை நான் பெரும்பாலும் படைப்போடு அந்நியப் படுத்தியே பார்க்கிறேன் அல்லது ஓவியம் வரையப் பட்ட எந்த ஒரு படைப்பையும் வாசிக்கும் முன்பே ஓவியத்தினுள் சென்று வருகிறேன். பின்பு அந்தப் படைப்பை வாசிக்கும் பொழுது அந்த கவிதை அல்லது கதை விட்டுச் செல்லும் இடத்தை தொடர்வதாகவோ, அந்த இடத்திற்கு முந்தைய அல்லது பிந்தைய காலக் கட்டத்தை சொல்லியோ அல்லது அந்த படைப்போடு போட்டி போடும் தன்மையை ஒரு சாதாரண வாசக நிலையில் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தால் அங்கே சிறப்பான ஒரு தேர்வு ஒன்றை உணர முடியும். படைப்பிற்கும் ஓவியத்திற்கும் ஆன தொடர்பு குறித்து நாங்கள் பேசுகையில் படைப்போடு சம்பந்தப்பட்டிருக்கிற அவசியம் தேவையற்றது என்று உணர்ந்திருந்தோம். என் பார்வையிலும் அப்படிப்பட்ட தகுதிகள் தான் ஒரு ஓவியத்தை தனித்தன்மை வாய்ந்தவையாகக் கருத வைக்கிறது. ஒரு படைப்பின் பிரதியாக மற்றொரு படைப்பு இருப்பது, அதுவும் அடுத்த பக்கத்திலேயே ஓவியமாய் இருப்பதும் பெரும்பாலும் அதில் உள்ள ஈர்ப்பைக் குறைத்துவிடும் என்பதும் என் எண்ணம், ஏனென்றால் வெகு சிலரே இரண்டையும் சம அளவில் ரசிக்கின்றனர். .


ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்களுள் இருக்கும் தனித்தன்மையை, அழகியலை, ஒரு சாமான்யனின் ரசனையினை அடிப்படையாய் கொண்டு சில ஓவியங்களைப் முன்னிறுத்தி எழுதுகிறேன்


ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

படைப்புடன்
பிசுபிசுத்த கனவுச் சித்திரம் என்ற கவிதையுடன் கூடிய இவர் ஓவியத்தில் கவிதைக்கும் சித்திரத்திற்குமான போட்டியை காண முடிகிறது. கவிதையில் தன் கனவுக்குள் செல்லும் கவிஞனின் காமம் ஒரு ஓவியமாய் வரையப் படுகிறது. காதலில் மொழியற்றுப் போன நிலையை கவிஞன் சித்திரமாக்கும் எத்தனிப்பில் தன் காதலை காட்சிகளாக விளக்குகிறான், மழை நீர் தெறித்த காகிதத்தில், வரையப்பெற்ற ஓவியத்தின் வண்ணம் கவிஞனின் உடல் நீர் பட்டு பிசுபிசுத்ததாய் கணவில் வெற்றி பெற்ற அக்கவிஞனுக்கு ஓவியன் தந்த ஓவியத்தில் கவிதையுடனான போட்டி இருக்கின்றது, இந்த ஓவியத்தில் ஒழுகிப், பின் கரைந்து, மறைந்து போன வண்ணம் போலல்லாது, காமம் எப்படியும் தன்னை வெளிப்படுத்தியே தீரும் என்று காமம் கரம் அசைத்து தீட்டிய வண்ணம் தரும் மானின் சாயலும், அரக்கனின் பாதித் தோற்றமும் இவ்வோவியத்தில் சொல்லிப் போகின்றது.

தனித்து
படைப்போடு ஒன்றிப் பார்க்கையில் எனக்குத் தோன்றிய மானின், அரக்கனின் சாயல்கள் இப்போழுது மறைந்து விட்டன வெறும் ஓவியமாக பார்க்கையில் குதிரை பின்புறம் திரும்பி இருப்பதை உணர்த்துகிறது, அதில் ஒழுகியிருக்கும் வண்ணங்களில் அந்தக் குதிரையினைத் திரும்பி நிறுத்த எடுத்திருக்கும் ஒரு ஓவியனின் கடும்முயற்சி தெரிகிறது. இது தன் நிழலைப் பார்த்து மிரண்டு போய் அடங்கா நின்ற குதிரையினை, மறுபக்கம் நிறுத்தி அடக்கிய அலெக்ஸாண்டரின் பழங்கதையினை நினைவுப் படுத்தியது. அது போன்றக் கதைகளின் மீது என் பால்யத்தில் நான் கொண்டிருந்த காதலையும் நான் நினைவு கூர்ந்தேன். குதிரையின் வால் ஆடுகிறது, அந்த வால் சுழிக்கும் வட்டங்களில் பல உருவங்கள் வந்து போகின்றன, சில நேரம் அது மான், சில நேரம் அது சாத்தான்.







2.
ஓவியனுக்கு என்று பிரத்தியோக பௌதீகக் கோட்பாடுகளும், பிரபஞ்ச ஆன்மீகமும் இருக்கிறதா என்ன ?

உயிர்களை வெறும் ஒரு பொருளாகவும், உயிரற்ற பொருட்களின் பௌதீகம் மாற்றப்பட்டு வண்ணங்களால் உயிர்மை தெளிப்பதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது, இவை கவிதைகளிலும் அதிகம் நிகழ்கிறது. அது போன்ற ஒரு முயற்சியாய் இந்த ஓவியத்தில் மனம் வரையப் பட்டுள்ளது. மிக நேர்த்தியாக மனம் வரையப் பட்டிருக்கிறது இவ்வோவியத்தில், ஒழுங்கற்ற யாவிலுமே ஒரு ஒழுங்கு நேர்த்தியாய் இருக்கிறதே இது பிரபஞ்ச உண்மை. இந்த ஓவியமும் அப்படித் தான் சிதைந்து போன மனச் சிதிலங்களின் உருவகம் நேர்த்தியாய் வரையப் பட்டிருக்கிறது, ஆனால் இதை உணர்ந்திடவும் உங்களுக்கு அதே குழப்பமான மனநிலை தேவைப் படுகிறது. இந்த வாசிப்பிலேயே குழப்பம் நிகழும், பின்னர் ஓவியத்தின் அழகு வெளிப்படும்.

விலங்கினங்களின் இருப்பை மனிதனின் அகயிருப்பில் பொருத்தி வரையும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி தனிப் பொருளாக மீன்கள் இருக்கிறது (இங்கே ஓவியத்துறையில் வல்லுனர்கள் வேறு பெயர் கொண்டு அழைக்கலாம் எனக்கு இது ஒரு ஓவியனின் தனிப் பொருள் ), இவரது முக்கிய ஓவியங்களில் எல்லாம் ஒரு மீனோ அல்லது சில மீன்களோ நீந்தி வந்துவிடுகின்றன, ஓவியத்தின் மையத்தை நான் அநேக நேரங்களில் மீன்களை வைத்தே முடிவு பண்ணுகிறேன். மீன்கள் என்றால் எல்லா மீன்களுமே திமிங்கிலம், டால்பின், சிறிய ஆற்று மீன்கள் என நிறைய வருகின்றன, வேறு சில மிருகங்களை இவர் கொண்டுவந்தாலும், சில மீன்களை அவர் வரையாமல் நாமாக அவர் வண்ணங்களில் கண்டுபிடித்து விடுலாம்.


ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

ஏன் இத்தனை விலங்குகள்? மீன்கள், திமிங்கலம், கங்காரு, பன்றி, முயல், தனித்தனியாக இரு கால்கள், இவற்றோடு ஒரு மனிதன் வாய் தைக்கப்பட்டு இருக்கிறான். இவற்றைக் கொண்டு என்ன தீர்மானிக்க முடிகிறது? வாய் தைக்கப்பட்டு இருக்கும் மனிதனின் கண்களில் வலி தெரியவில்லை, கண்கள் நிம்மதியில் மூடியிருப்பதாக தெரிகிறது அல்லது வலி மரத்துப் போய் (அவன் ஏற்றுக் கொண்டதாகவும் இருக்கலாம்) அல்லது அவன் மரித்துப் போய் இருக்கலாம்? அப்படியென்றால் இங்கிருக்கும் விலங்குகள் எப்படி இவனுடன் சம்பந்தப்படுகின்றன? வெறும் கனவு போல தொடர்பற்றவையாக இருக்குமா ? கனவு பற்றி குறிப்பெடுக்க நான் ஃபிராய்டு இல்லையே? கனவுகளின் நுட்பத்தை சொல்ல முடியாது? ஆனால் காதல் வயப்படாதவன் அல்ல, புறத்திணைகளின் வரும் கைக்கிளைத் தினை போல காதலை சொல்ல முடியாமல் கையறு நிலையில் இருப்பவனாக பார்க்கிறேன்.

தன் காதலைச் சொல்ல முடியாதவனின்(காமத்தை அடக்கி வைப்பவனின்) உணர்வுகளை சித்தரிப்பதாய் தோன்றுகிறது. உணர்வுகள் தைக்கப்பட்டு புதைந்திருக்கும் மனிதனின் மனமே மற்ற விலங்குகள் என்று தோன்றுகிறது. காமத்தின் குறியீடாக பல விலங்குகள் இருப்பதே இந்த ஓவியத்தின் சிறப்பாக நான் உணர்கிறேன். காதலின் வீரியம் எப்பொழுதுமே ஒரே மாதிரியாகவா இருக்கிறது, இல்லை காமம் என்பது ஒரு வீரியமா. உடல் தரும் ஈர்ப்பில் மனம் சில நேரம் முயல் போல் தாவுகிறது, கங்காரு போலவும் தாவுகிறது, சிறு சிறு மீன்களாய் நீர்க் குமிளிடுகின்றன, திமிங்கிலமாய் அலையெழுப்புகின்றன, பன்றியாய் அவை இயல்பாக இருக்கின்றன தன் வாலையாட்டி காதலைச் சொல்கின்றன. ஆனால் யாவும் மனதினில், புறவுலகில் எவை என் வாயைத் தைத்து வைத்திருக்கின்றன?

ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

காட்சி: இது ஒரு முப்பரிமான ஓவியம், இந்த ஓவியத்தில் ஒரு புலியைக் கொல்ல அதன் உடலில் கத்தியை ஒரு மனிதன் சொருகியிருக்கும் காட்சி, இதில் உடலில் ஒரு பக்கம் உள்ளே சென்றிருக்கும் கத்தி உடலின் மறுபக்கம் வெளியே செல்கிறது. ஆனால் அந்த மிருகத்தின் கால்கள் ஊன்றியிருக்கும் விதம் வலியை உணர்த்தாமல், அம்மிருகம் அந்நரனை கொல்வதில் முனைந்திருப்பதாகக் காட்டுகிறது. மாறாக மனிதன் வேட்டையாடப் பட்டுவிட்டதாய் உணர்கின்றேன். இதில் இருக்கும் இரண்டு மனித உருவம் ஒருவன் மடிந்ததாகவும், போராடுவதாகவும் இருக்கின்றது, போராடுபவன் மிருகத்தின் மனித உருவம், உண்மையில் புலி தன் எதிரியைக் கொன்றுவிட்டது. மிருகத்தின் கால்களை ஒட்டியிருக்கும் கோடுகள் திரும்பியவாறு இருக்கும் மிருகத்தின் குரூரக் கண்கள் மிரட்டுகிறது. இதில் ஒரு சிலருக்கு காளை தான் முதலில் தெரியும், சிலருக்கு புலி- காளை என்றால் நீங்கள் வேட்டையாடலாம், புலியென்றால் உங்களை வேட்டையாடும் ஆனால் வேட்டை என்பது உறுதி.

இந்த ஓவியம் பசிக்கான ஒரு கொலையாக (இரை வேட்டை) மட்டும் உணரமுடியவில்லை. அது ஒரு மிகப் பயங்கரமான ஒரு வேட்டையே அல்லது போர் என்றும் எடுத்துக் கொள்ள முடியும். மிருகத்தின் கம்பீரமும் (உடலில் கத்தி சொறுகியிறுந்த போதும்), மனிதனின் போராட்டமும் வேட்டையை அல்லது ஒரு பழி தீர்ப்பை பிரதி எடுக்கிறது. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதனும், மிருகமும் வருவதால் இந்த வேட்டை ஒரு பழி தீர்த்தலாகிறது. மேலும் ஒரு முப்பரிமானப் பார்வையாய் மிருகத்தின் வால், அதன் உடல்களில் சொருகியிருக்கும் கத்தியை கொம்பாக உருமாற்றி அந்த விலங்கை காளையாகவும் மாற்றுகிறது. இந்த வேட்டை ஓவியம் நம் வரலாற்றோடு தொடர்புடைய செய்திகளில் உவமைப்படுத்த நிறையவே இடம் கொடுக்கிறது.அதனால் தான் அந்த விலங்கு புலியாகத் தான் இருக்கும் என்று உறுதியாகத் தோன்றுகிறது, ஈழத்து நினைவுகள் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. புலியை மனிதன் கொல்கின்றான், புலி செத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் அது தன் கம்பீரம் இழக்கவில்லை. இன்றைய கருத்துச் சுதந்திர வெளியில் அரசியலுக்கான பல உரையாடல்களை ஒரு ஓவியம் செய்ய முடியும் என்று தோன்றுகிறது, அண்மையில் நடந்த ஒரு சில சம்பவங்கள் இதை நமக்கு ஞாபகப் படுத்தும்.

ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

4. தனி மனிதனின் அவஸ்தைகளையும், உலகத்தோடு ஒன்றி வாழ முடியாத துயரங்களையும், மனச் சிதிலங்களையும் பிரதி எடுக்கும் படைப்பே நவீனத்தின் பிரதான இயங்கு தளம், அவன் வாழும் மண்ணின் அரசியலோ, மதமோ, சமூகமோ நவீனத்தின் அடுத்த படிகளில் தான் இருக்கிறது. அவ்வகையில் இந்த ஓவியத்திற்கான சிறப்பான தனியிடம் அதன் முகம் ஒரு ஆணைப் போலவும், உடல் பெண்ணாகவும், இடுப்பிற்கு கீழ் பல குறிகள் அவ்வுருவத்தை விநோதப் படுத்துகின்றன.

ஒரு திருநங்கையாக இருப்பதால் தன் குறி மீது கொண்ட வெறுப்பின் விளைவாக அறுத்தெறிந்தாலும்(குறி - கைகளில் ஏந்தியிருக்கும் மீன்), தன்னை பெண்ணாக பாவிக்காமல், அவருக்கு இன்னும் குறிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் சாயலை தீட்டியது போல் ஆழமான ஒரு செய்தியை மறைத்து வைத்துள்ளது. இங்கே அமைந்துள்ள மீன்கள் தான் அந்த ஓவியத்தில் ஒரு செய்தியை இழுத்து வரும் தூண்டிலாகின்றன என்று சொல்வ்து மிகையல்ல. பெண்ணாய் வாழ விரும்பும் ஒரு உயிருக்கு இன்னமும் அவள் குறியை சுட்டிப் பேசும் பாழ்/மூட சமூகத்தின் கொடுஞ்செயல்களை தீட்டிய கோடுகள் இவை. சமூகம் திருநங்கைகளுக்கு தரும் குறிகள், ஆக்டோபஸ்களாய் மாறி துன்புறுத்துகின்றன.


ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

5. வானம் நோக்கி நிமிர்ந்து நிற்கும் குதிரையும், தன்னையே இயக்கும் தலையில்லா மானும், தலை கவிழ்ந்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் பெண்ணாகவும் ஒரு அத்துவான வெளியில் தீட்டப்பட்டுள்ளது. இசை, இச்சை இந்த இரண்டில் ஏதோ ஒரு உந்துதல் இப்படி செய்யலாம். இந்த ஓவியம் இனம் கொள்ள முடியா ஒரு அழகியல் ஈர்ப்பைக் கொணருகிறது, அதைச் சொல்ல முடியாமல் தோற்றுப் போவதையும் விரும்புகிறேன்.

தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பதில் எனக்கு சில காட்சிகள் கிடைத்துவிட்டன, இது ஒரு முக்கோணக் காதல் அல்லது மூன்று வெவேறு மனிதர்களின் மனநிலை(காமத்தில்), ஒருவனின் காமம் குதிரையாக இருக்கிறது அவன் புலன்களை கட்டுப்படுத்த இயலவில்லை, அவன் குதிரையாகிறான். ஆனால் அவனுக்கு அவளிடம் இசைவு இல்லை வானம் நோக்குகிறான் இது கைக்கிளைத் திணை, மற்றொன்று ஒரு மானைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனின் உடல், ஆம் அவனுக்கு முகமில்லை, பெண்ணை பலவந்தப் படுத்துபவனுக்கு முகமெதற்கு, அவனுக்கு குறி தான் முகம். அவன் முதுகில் தாங்கி நிற்கும் அம்புகள் தான் இவன் குறி, இவன் முகம். இது போன்ற ஒருவனின் வன்புணர்வுக்கு ஆளானவளாய் ஒரு பெண்ணின் நிலை தலை கவிழ்ந்திருக்கிறது. அவள் உடலில் வேதனை கிளம்பியிருக்கிறது, அவள் காதல் பொய்யாகிவிட்டது. மானின் கால்களில் மறைந்துள்ள மண்டை ஓடு போல் மெய்மை அறியா வாழ்வு நம்மை துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. இப்படி ஓவியம் ஒரு பார்வையாளானுக்கு பல பரிமானங்களை கொடுக்கிறது,

ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

6. இந்த ஓவியத்தின் நிலம் உலகத்திற்கே பொதுவானது, பெருத்த வலியுடனான ஒரு பெண்ணின் அண்டத்தில் இருந்து ஒழுகும்/பிறக்கும் உலகமாக இருப்பது போல் தீட்டப்பட்டுள்ள கோடுகளும், அந்த உடல் தாங்க முடியாத வலியில் துடிப்பதைக் காணலாம். ஒரு பெண்ணின் பிரசவ நிலையை உணர்த்துவதாகவும் தோன்றுகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஓவியத்தின் மீது சாதாரணமாக விழும் முகச்சுளிப்பு தான் இந்த படைப்பின் வெற்றி. உலகம் முழுதும் உதிரும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை முன்வைக்கும் கோப்புகளின் பிம்பமாகவும் இதை உணர்கிறேன்.

இதைப் பற்றி அதிகம் எழுதத் தேவையில்லை, abstract ஆக இதை ஒரு பார்வையாளன் புரிந்து கொள்ள முடியும். முகம் தெரியாத உடலில் புலனாகும் வாதை எப்படி சாத்தியம் ? முகம் தெரியாத போதும் பெண்ணின் பிரசவ நிலையைப் பற்றி பார்வையாளனின் அறிவு அவளின் வலியை உணர்கிறதா, இல்லை ஓவியம் பிரசவத்தின் தத்ரூபத்தை, அவள் துடிப்பதை தாள முடியாத வலியில் கால்களை ஊன்றியிருக்கும் கோடுகள் வழியாக பார்ப்பவனுக்கும் கடத்துகிறதா?


                                             ( ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)
 

இந்த வண்ணங்களால் ஆன ஓவியத்தில் கோடுகள் மிகக் குறைவு அது தான் மேய்க்கும் விலங்குகள் புணரும் காட்சியைப் பார்க்கும் ஒரு மேய்ப்பானை காட்சிப் படுத்துகிறது. இதில் வெள்ளையான பகுதியில் இருக்கும் கோடுகள் மேய்ப்பவனின் காம தாகத்தை தனியாக காண்பிக்கிறது. அந்த வெள்ளைப் பகுதியில் இருக்கும் கோடுகள் ஒழுங்கற்று, தொடர்பற்று இருப்பவை, அது விலங்குகளைப் பார்த்து தன் காமத்தையும் எண்ணும் ஒரு மனிதனின் நிலையாக இருக்கிறது. ஒரு வேளை கீழிருக்கும் பச்சை வண்ணம் நிலத்தின் நிறமாக இருந்தாலும், மற்ற வண்ணங்கள் காட்சிப் படுத்தும் வெளிகள் அகம் சார்ந்தவை.

பொதுவாக ஓவியம் காட்சியை நம் மூளைக்குள் பதிவேற்றி, அதற்குத் தகுந்த எண்ணங்களை அறிவின் வாயிலாக கொண்டு வரும் தண்டவாளாங்கள் அறுந்து, நேராக வர்ணங்களும், கோடுகளுமே உணர்வுகள் ஆகின்றன, தொடர்ந்து ஓவியத்தை வாசித்தலே (ஆம் வாசித்தல் தான்) இதை சாத்தியப் படுத்துகின்றன. இதை உணரும் போதே கருமைக்கும், இருளுக்குமான வித்தியாசம் நமக்குப் புலப்படும். மேலும் இந்த ஓவியம் குகை ஓவியங்களை ஞாபகப் படுத்தும் கோடுகளாய் வண்ணங்களுக்குள் மறைந்திருக்கும் போது, அன்றைய மனிதன் தன் சித்திரங்களில் வண்ணத்திற்காக எத்தனை பிரயர்த்தனம் பண்ணியிருப்பான் என்று வியக்க வைக்கின்றது.


ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

8. ஒரு யானை தன் பாகனைக் கொல்லும் காட்சிகள் தோன்றும் சித்திரத்தில், காலங்காலமாய் நம்மால் அடிமைப் படுத்தப்பட்டு நம் சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் யானை இனம், அவ்வப்பொழுது தனக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை மீறி மனித உயிர்களை விலை கேட்டுக் கொண்டிருக்கிறது, அது யார் தவறு. நிச்சயமாய் மனிதனின் தவறு என்று சொல்வது போல் யானையின் தலை மனிதனின்(அரசன்/அரக்கன்) தலையில் இருப்பதை வைத்து புரிந்து கொள்ளலாம். மனிதர்களின் வலி உடல் வழியாக புலப்படுகிறது.

துதிக்கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் உடலில் இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை நுண்ணிய கோடுகள் சொல்கின்றன. ஆனால் அந்த மனிதனால் யானையிடம் தப்பிக்க இயலாது என்பதை உணர்ந்தவனாகத் தெரிகிறது, அதனால் தான் அவனிடம் எந்தப் போராட்டமும் தெரியவில்லை. அடுத்த அடியில், அல்லது தூக்கியெறியப் படுதலில் அவன் உயிர் துறப்பான். ஆனால் அவன் மரணத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும், அதுவும் தன் அடிமையான யானையின் கரங்களால். அந்த நிலை தான் குருதி வழிந்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முகத்தில் தெரிகிறது. தன் அகால மரணத்தை ஏற்றுக் கொண்ட மனிதனின் உயிர் பிரியும் கடைசி நிமிடம் தான் அந்தத் தலையாக இருக்கிறது.







முதலில் எனக்கும் நவீன ஓவியங்கள் அவ்வளவு எளிதாகப் புரிந்திடவில்லை, அதை அணுகும் முயற்சியற்று பக்கங்களை புரட்டி விடும் பழக்கமே கொண்டிருந்தேன், நாம் அணுகினால் தானே அவை புரிந்திட? அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் வெகுஜன இதழ்களில் வரும் ஓவியங்கள் எப்படி இருக்கின்றன? அதன் படைப்பில் உள்ள ஏதோ ஒரு காட்சியின் பிம்பத்தோடு ஒட்டி வருவதால் ஓவியங்கள் நம்மிடம் தனியாக தாக்கம் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஒரு சிறுகதையில் கிராமம் வருகிறது என்றால் அதன் ஓவியத்தில் சில குடிசைகள், சாலையில் ஒரு மாட்டுவண்டி மற்றும் கையில் ஒரு சாட்டையுடன் இருக்கும் ஒருவன் வருவான். அது போல, ஒரு கவிதையில் ஒரு பெண் மணமுறிவிலோ, காதல் தோல்வியிலோ இருக்கிறாள் என்றாள் முகம் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் தோற்றம், பூக்களைப் பற்றிய கவிதையிலோ வெறும் பூவை கிளிக்கிய கூகில் இமேஜ் என்று படைப்பைத் தாண்டி ஒரு அங்குலம் மாறாத இணைப்பாகவே (complimentary product) ஓவியங்களும் நிழற்படங்களும் இருந்து வருகின்றன. ஆக தனியாகப் புரிந்து கொள்ள ஏதுமல்லாது பிரசுரிக்கப் படும் ஓவியத்தில் தனிப்பட்ட ஈர்ப்பு வருவதில்லை, மேலும் அட்டைப்படங்களில் கூட நடிக,நடிகை கவர்ச்சிப் படங்களை பிரசுரித்து வியாபாரத்தை மட்டும் அளவீடாகக் கொண்டு செயல்படும் இதழ்களில் வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது. இது ஓவியங்களின் குறை என்று நான் சொல்லிடவில்லை, இன்றைய வெகுஜன இதழ்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஓவியங்களில் பெரிய ஈர்ப்பு ஒன்றும் நிகழ்வது இல்லை, இது சில இலக்கிய இதழ்களிலும் இருக்கவே செய்கின்றது, ஒரு கவிதைக்கோ, கட்டுரைக்கோ, கதைக்கோ எடுத்துக் கொள்ளப் படும் சிரமம், ஒரு ஓவியத்தை தேர்ந்தெடுக்க தேவைப்படுவதில்லை.

இப்படிப் பட்ட நிலையில், வெறும் வாசகனாக ஒருவன் ஓவியத்தைப் பற்றி சிலாகித்துக் கொள்ள எதுவுமற்ற நிலை உருவானது நம் சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பு தான். இதைப் புரிந்து கொள்ளும் நிலையில் தான் இது போன்ற ஒரு கட்டுரை ஒன்றை நான் எழுத விழைந்தேன். சில நேரங்களில் படைப்புகளில் வரும் ஓவியங்கள் நம்மைப் பெரிதும் ஈர்த்தும் அந்தக் கவியையோ, கதையினையோ வாசிக்க முனைகையில் அதில் ஏற்படும் சலிப்பு ஓவியங்களிலும் வந்து விடுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கட்டுரையில் கூட சில தேவையற்ற வாக்கியங்கள் அமர்ந்து கொண்டு இன்னும் ஓவியம் பற்றி சொல்ல விடாமால் மறித்துக்கொண்டதை நீங்களும் அவதானிக்கலாம்.


நவீன ஓவியங்களின் கோட்பாடு இவை தான் என்று எதைச் சொல்கிறார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை, எந்த இயங்களைப் பற்றியும் இங்கு பகுக்கவும் முயலவில்லை. எல்லாம் தன்னாலே நிகழ்ந்துவிடுகிறது, ஓவியன் தீட்டும் போது இருந்த அகவுணர்வுகள் எல்லாம் இதை பார்ப்பவனுக்கும் கடத்தப்படுகிறது. ஆனால் எளிதாக நடந்து விடவில்லை ஓவியத்துடன் சில சம்பாஷனைகள் நடைபெறுகிறது, சில சமயம் சறுக்கியும் விடுகிறேன். அது பல சமயம் ஓவியத்தில் சூட்சுமமாய் மறைந்திருக்கும் வியாபாரியின் கண்கட்டு வித்தையோ?, இல்லை இந்த அவசர யுகத்தில் பக்கங்களைப் புரட்டும் பாமர வயிற்றுப் போக்கோ?.

ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

நிர்வாணங்களை வரையும் ஓவ்வொரு படங்களிலும் இவர் காதலைக் காட்டிலும் சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது. ஒரு படத்தில் ஆடைகள் துறந்த உடல்களுக்கு மத்தியில் ஒன்றுமே அற்ற வெறுமை தெரிந்தது, அந்த உடல்களின் நிர்வாணத்தை வெறுமையில் உருமாற்றிட மையத்தில் இருந்த லிங்கம் இம்மனநிலைக்கு உதவுகிறது. இந்த ஓவியங்களுக்கு, ஒரு வேளை வெகு ஜனங்களுக்கு முன் வைக்கப் படும் பொழுது இவருக்கு எதிர்ப்புகள் வரலாம் ஆனால் இது போன்ற விமர்சனங்கள் அவருக்கு பக்கபலமாய் இருக்கும் என்பது நிதர்சனம்.

தொடர்ந்து காலச்சுவடு போன்ற சில இதழ்களில் மட்டுமே ஓவியங்களுக்கான
முக்கியத்துவத்தை உணர முடியும், ஏனெனில் அவை அமைத்து தரும் பாதைகளில் பயணிக்க பல இலக்கிய இதழ்களே தயராக இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமே, முக்கியமாக அட்டைப் படங்களில் அவர்கள் ஓவியத்திற்கு தரும் இடம் தான் அந்த இதழ் உண்மையில் கலைக்கான நேர்மையான பங்களிப்பைத் தருகிறது என்பதில் ஐயம் இல்லை. சமீபத்தில் சிலேட் இதழில் அட்டைப் படமாக வந்திருந்த இவரது ஓவியத்தை வெகு நேரம் கண்ணுற்றிருந்தேன், இருளிற்கும், கருப்பிற்குமுண்டான வித்தியாசங்கள் ஓடின. மிகப் பிரமாதமாக ஒரு ஓவியனுக்கு கொடுக்கும் மரியாதையாக அந்த அட்டைப் படமாக வெளிவந்த அந்த இதழின் அறம் என்னைக் கவர்ந்தது, மிக அற்புதமான அந்த ஓவியத்ஹ்டை சிலாகித்து பேசுகையில், அது எத்தனை இதழகளில் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருந்தது என்று அவரிடம் கேட்ட பொழுது மௌனம் தான் மிஞ்சியது.

கீழே தரப்பட்டுள்ள ஒரு நல்ல படைப்பை, இதன் வாயிலாக ஒரு ஓவியனின் கடுமையான வாழ்க்கையை என்னால் உள்வாங்க முடிகிறது.

ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

9. கால்களில் வழிந்தோடும் குருதி, அதை பருகிட துடிக்கும் விசித்திர மீன்கள் என காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் ஓவியம், ஒரு பாதையின் கடுமையும், அதைப் பொருட்படுத்தாது தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே செல்ல வேண்டிய நிர்பந்தம், அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட சமூகமோ, குடும்பமோ. பொருளீட்டலில் சுமை கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவனின் வலியாகவும் பார்க்கலாம்.

ஆனால் வாழ்வில் பிழைப்பதற்கு, பொருளீட்டுவதற்கு என்று பல வழிகள் இருக்க கலையென்ற பாதையை தேர்ந்தெடுத்து விரதம் மேற்கொள்ளும் கலைஞனின் பாதையாக தன்னை உலக இயக்கங்களில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்தாலும், உலக வாழ்வின் வழிப்போக்கர்களாகவும், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தனக்கென்று தனி உலகம் வைத்திருக்கும் செல்வந்தர்களாகவும் இருக்கும் கலைஞர்களின் பாதையை குறிக்கும் அற்புத ஓவியம் இது.

இன்றைய நவீன ஓவியங்கள் வெகுஜனங்களுக்கு மிக அருகிலே தான் இருக்கிறது, இயந்திர உலகில் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தன் இருப்பைக் கண்டுகொள்ள கலைகள் தேவை தான். ஆனால் இதைக் கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்களுக்குத் தான் அக்கறையில்லை, அடுத்த கட்டத்திற்கு ஒரு வாசகன் செல்ல வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது ஊடகங்கள் தான், ஆனால் வியாபரம் என்று கவர்ச்சிப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், செலவுக் குறைவு என்று இணையத்திலிருந்து படங்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்வதும், பணம் ஈட்டுவதில் சில ஓவியர்கள் தம்மை சமரசப் படுத்திக் கொள்வதும் குற்றமில்லை, மேலை நாட்டு ஓவியர்களை மட்டுமே சிலாகித்து கட்டுரைகள் வந்துக் கொண்டிருப்பதும் கூட இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம், ஏனென்றால் இவர்கள் சமகால உள்ளூர் ஓவியர்களைப் பற்றி எழுதும் அக்கறையற்று இருக்கிறார்கள்.

ஆனால் நவீன ஓவியங்களின் வரிசையில் வான்கோ, பிகாசோ, காகின், கிளிம்ட், வாஸில்லி கண்டின்ஸ்கி, வில்லியம் பிளேக் என்று நீண்டு செல்லும் வரிசையில் இருக்க வேண்டிய எத்தனையோ ஓவியர்கள் இந்நிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கையாண்டுக் கொண்டிருக்கும் இந்தியச் சூழல், மரபுகள், சமூகப் பிரச்சனைகள், மனச் சிதிலங்கள், காதல், மதம், பொருளாதாரம் ஆகியவற்றின் சூழலை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இன்னும் தகுதியுள்ளவர்களால் எடுத்துக் கொள்ளப் படாமல் இருக்கிறது.

இப்பொழுது சப்தமற்ற அறையினுள் ஒரு மின்விசிறியின் இரைச்சல் எப்படி சித்திரமாகும் சாத்தியம் இருக்கிறது? அப்படி ஆகும் போது எனது தனிமையை அதில் உவமைப் படுத்த முடியுமா என்றெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.


                                             _______________________________________________
 
 





மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...