பெண்களில் இவர்
ஆதியைக் கண்டார்
கணேசகுமாரன்
(ஒவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)
படைப்பாளியின் உருவப் படத்தை சிற்றிதழ் வாசகன்
பார்ப்பதில்லை.படைப்பையே பார்க்கிறான். ஆனால் எவருக்கும் புலப்படாதபடி உள்ள கதையை
அதன் படைப்பாளி முகத்தில் வாசிப்பதாகச் சொன்னார் மார்க்வெஸ். எனவே ஆம்பூரிலிருந்து
ஞானப்பிரகாசம் ஸ்தபதி கோட்டோவியங்களில் 23 கவி
முகங்கள் படைப்புகளாகி இதழில் வருகிறார்கள். - கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்
சிறப்பிதழில் இடம்பெற்ற ஞானப்பிரகாசம் ஸ்தபதி படைப்பாளர்களின் கோட்டோவியங்கள் குறித்து அவ்விதழிலே கோணங்கி.
பின்னட்டை, இடக்கைப்பெருவிரல்
ரேகைகளின் வடிவில் அலையும் தலைப்பிரட்டை முகம் கொண்ட விந்தணுக்கள், ஊடாடும்
சிதிலங்கொண்டு ஆவியாகும் எழுத்துருக்கள் டி. என்.ஏக்களில் உறைந்த மொழி மற்றும்
அறிவின் சாரம். புனைவுலக சிசு நீந்துகின்ற பனிக்குடத்தில் வசிக்கும் மீன்கள் மொத்த
சித்திரத்தையும் முதலுயிர் ஜனித்த கடலாக்கி பார்க்கும் பிரபஞ்சத் துவக்கம் - வலசை
முதல் இதழின் பின் அட்டையில் இடம்பெற்ற ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியம் குறித்து
நேசமித்ரன்.
கவிஞனும்
ஓவியனும் ஓர் அம்சத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எளிமை அவர்களின்
தனித்தன்மை. - என்.கோபி ( தெலுங்குக் கவிஞர்)
பக்கம்
பக்கமாய் பேசி விளக்கவேண்டிய ஒரு நிகழ்வை சிறு கோட்டில் அலட்சியமாக
விளக்கிவிட்டுப் போகிறவர்கள் ஓவியர்கள். ஓவியன் தன் கண்களினால் இவ்வுலகை
ஓவியமாகவேக் காண்கிறான். ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. ஆரம்பத்தில் இவரின் ஓவியங்களில் கோடுகளே பிரதானமாயிருந்தது.
கோடுகள் மூலம் அவர் சொன்ன கதைகளே சிக்கலில்லாமல் பிரமிக்கவைக்க கோட்டோவியங்களில்
தன் முத்திரையை பதித்தவர் பின்பு மெல்ல தன் தூரிகையின் கண்களுக்கு வேறு வித
லென்ஸ்களை மாட்டினார். ஓவியனின் வழக்கமான பார்வை தவிர்த்து இவர் கண்ட ஒருவித
உன்மத்த நிலைப் பார்வை மனிதனின் அகம் இறங்கி யோசிக்க வைத்தது. சிறு கேன்வாசுக்குள்
இவர் படைப்பின் மூலம் முன்வைத்த ஆச்சரியங்கள், கேள்விகள்
பார்வையாளன் மனத்தில் தேடலை உருவாக்கியது. பெண்களில் இவர் ஆதியைக் கண்டார். சூழ்
பெண்ணொருத்தி இயற்கையை அணிந்து நின்ற ஓவியம் இவரின் சிறப்பில் ஒன்று. ஒரு
புள்ளியில் ஆரம்பிக்கும் கோட்டின் வழியே சில விலங்குகளும் பறவைகளும் மனிதனும்
நமக்கு புதியதொரு அனுபவத்தை உணர்த்துவார்கள். கவிதைகளை உள்ளடக்கிய இவரின்
ஓவியங்கள் பார்வையாளனின் சிந்தனைகளை கிளறச்செய்யும்.
இவரின் தூரிகைப்
பயணங்கள் தொடர்கிறது. மேலும்
மேலும் ஓவியத்தேடல்களில் இருப்பவர். இளம் வயது ஞானப்பிரகாசம்
ஸ்தபதி மூளையில் ஒரு
நிரந்தரத் தூரிகை வரைந்தபடி
இருக்கிறது.
நிறைய அனுபவம் இருக்கிறது. உங்கள்
பதிவுகள் பதிய போதாத இவ்வுலகம்
வேறொரு உலகத்தினையும் உருவாக்கலாம்.
கொம்பு சிற்றிதழுக்கு
இவர் வரைந்த சூல்பெண்ணின் யானை,குதிரை, பறவை,இணைந்த ஓவியம் அபாரமானது. ஆழமானத்
தேடல் உள்ளவை இவரின் ஓவியங்கள். எல்லாமே ஒரு புள்ளியில் ஆரம்பிக்கிறது. பல
புள்ளிகள் ஒன்றிணைந்து இவர் தரும் ஓவிய உலகம் ஆச்சரியத்தினை அளிப்பதோடு வாசகனுக்கு
புத்தம் புதியதாய் ஓர் அனுபவத்தை தருகிறது என்பதில் சந்தேகமில்லை. இவர்
உருவாக்கும் ஓவியத் தசைகள், சன்னதக் கண்கள், காற்றை
இறுக்கிப் பிடிக்கும் கைகள், தொன்மக் கதை பேசும்
முதுகெலும்பு அனைத்தும் நவீனக் கதைசொல்லிகள் வழியே இணைந்து செல்கிறது.