Monday, 13 August 2012

கோடுகளால் தீட்டப்பட்ட நவீன மூலம்


                                                                                (ஞானப்பிரகாசம்  ஸ்தபதி)



மேலும் இறுக்கமானதாக மொழி மாறிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஒரு கவிதையின் ஓர்மையோ அல்லது அது சார்ந்த எழுத்தின் கூர்மையோ அன்றி நேரிடையாகச் சொல்லல் என்னும் தன்மைகளைக் கடந்து வாசக படைப்பனுவத்தைக் கோருகின்ற பிரதிகளை உருவாக்கும் மொழியாளுமைகள் நிறைந்தும் அதனால் அகவுணர்வுக் கோட்பாடுகள் மிகைந்தும் கனவின் நீட்சியாக நிலைக்கும் அதிரூபத்தின் சிறப்புகளை எழுதும்போது அதே நனவிலி மனநிலையில் இருந்துகொண்டே எழுதுவதும் சிறப்பெனவேக் கருதப்படும் காலமாக இக்காலம் மாறிவருகிறது. பின் நவீனத்துவக் கோட்பாடுகள் தனக்கான கட்டுகளை உடைத்துக்கொண்டு விளிம்பின் இடப்பெயரலாக மையத்தை நோக்கி நகரும் கட்டுடைத்தலை நிகழ்த்தும் காலத்தின் தீவிரம் நிகழும் தருணம் இது.




                             

எழுத்தின் உளவியல் என்பது அது சார்ந்து இயங்கும் தனிமனித பின்புலம் மட்டுமின்றி அத்தனிமனம் ஆற்றுகின்ற அசிரத்தையான அல்லது சிரத்தையான செயல்களின் ஊக்கங்களும் கொண்ட ஒரு அமானுஷ்யம் தான். அது பிறகான பின்விளைவுகளை நிகழ்த்தும் கூறுகளை அதன் போக்கில் உணர்பவர்களாகவோ அல்லது அதை பின்பற்றுபவர்களாகவோ அல்லது அதன் மீது எந்த விதமான எதிர்வினை ஆற்றாதவர்களாகவோ மாறிவிடுகிறார்கள். வாசிப்பு என்னும் செயல்பாடு வாசக மனத்துள் நிகழ்த்தும் கோரல் முழுக்க காத்திரமான செய்தி சேகரிப்பு என்னும் நிலையும் இருக்கிறது. அதையும் தாண்டி அப்பிரதி ஆற்றுகின்ற காரியம் என்பது தனிமனித மனமாறுபாடு. எழுத்துப் பிரதிகள் ஆற்றுகின்ற இப்பணியினை ஓர் ஓவியப் பிரதி உருவாக்க முடியுமா?

ஒவியப்பிரதிகள்  மிகவும் நுட்பமானவை. அவற்றின் இயங்குதளம் என்பது மனித வாழ்வின் விழுமியங்கள் தோற்ற இடம். கோடுகளால் உருவாக்கப்பட்ட நவீன ஓவியங்கள் பார்வையாளனை மிகவும் வலிந்து தன்னுடள் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையன. ஒவ்வொரு தீற்றலும் அதற்கான செம்பொருளைத் தாங்கிக் கொண்டு தன்னைக் காணும் கண்களை அதனோடு தொடர்புடைய மனித மனத்தோடும் உடலோடும் வினையாற்றக் கூடியன.ஞானப்பிரகாசத்தின் கோடுகளும் அத்தகையதே. பார்வையாளனை இன்னொருமுறை படைக்கவைக்க வல்லன அவரின் கோடுகள். அந்தக் கோடுகளின் மெல்லியத் தன்மையும் தடித்த தன்மையும் ஓவியத்திற்கான பரிமாணங்களை பார்வையாளனைக் கொண்டு செல்ல வேண்டிய இட்த்திற்கு சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்லக் கூடியன.

சமீபத்திய இதழ்களில் இடம் பெறும் அவரின் நவீன ஓவியங்கள், நுண்மையாக மரபியலைத் தன்னுள் வைத்திருக்கும் விசித்திரம் கொண்டவை. சமீபத்தில் அவரால் வரையப்பட்ட நவீன எழுத்தாளர்களின் ஓவியங்கள் கோடுகளாலானவை. அந்தக் கோடுகளை அவர் பயன்படுத்தியிருக்கும் லாவகம் என்பது அலாதியானது. ஓர் இலக்கிய வாசகத் தளத்திற்கு அவர்கள் வாசித்த ஆளுமைகளின் படைப்பூக்கம் என்பதை அவர்களின் உருவ உருவாக்கத்தில் நாம் ஞானப்பிரகாசத்தின் ஓவியங்களில் அறியலாம். குறிப்பாக எழுத்தாளர் கோணங்கியின் ஓவியம் இருட்டுக்குள்ளிருந்து கிள்ம்பும் கோடுகளால் ஆனது.அவருடைய பாதிமுகம் ஒளியிலும் இருண்மையிலும் இருக்கும் அது அவரின் படைப்புகளைப் போல இருண்மைப் பொருந்தியதாகவும் பூடகமானதாகவும் அமைந்திருப்பது இயற்கையாக அமைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும் குட்டி ரேவதியின் ஓவியம் வெளிச்சக் கோடுகளால் ஆனது. அதுவும் அவரின் படைப்பு வெளியினைப் போன்றதுதான். உடல்மொழி அரசியலை நிகழ்த்தும் அவரின் ஆக்கங்களை அவருடைய ஓவியத்திலேயே கொண்டுவரும் யுக்தி ஞானப்பிரகாசத்தின் புதிய பாணியிலானது. சுகிர்தராணியின் முகத்திரட்சியை அவர் கோடுகளால் உருவாகியிருப்பது மிகவும் நேர்த்தியானது எனலாம்.

                                                                  (ஓவியம் - ஞானப்பிரகாசம்  ஸ்தபதி)

ஞானப்பிரகாசத்தின்  அரூப வகை ஓவியங்கள் (abstract) அவர் வண்ணங்களில் உருவாக்கினாலும் கருப்பு வெள்ளையில் உருவாக்கினாலும் மிகவும் ஆதர்சனமான அவதான்ங்களைக் கொண்டிருப்பதாக நாம் கொள்ளலாம். அவரின் புனைவுகள் கற்பனைகளைத் தாண்டி பார்வையாளனின் நனவோட்ட்த்தின் நரம்பு மண்டலங்களில் பாயக் கூடியன. எருது, பசு, புலி, பூனை போன்ற குறியீட்டு சித்திரங்கள் அவற்றின் புறவயம் சார்ந்த தேவைகளை உருவாக்கி அந்த்த் தேவைகளை அவை சுகிப்பதாகவும் அதே நேரத்தில் அதை மீறிய ஒரு குறியீட்டுத் தன்மை அவற்றுள் நிகழ்கிறது. இரண்டு மாடுகள் மனித உருவில் மோதிக் கொள்வதும் அவற்றுக்குப் பின் புறம் பாம்புகள் சூழ்வதும் மிகவும் முக்கிய அரசியலைப் பேசுகின்றனவாகப் படுகிறது. பாம்புகள் தீமைக்கும் மாடுகள் உழைப்பிற்குமான குறியீடாக இயங்கும் மனநிலையில் அந்த ஓவியப் பிரதி சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு உழைக்கும் வர்க்கங்களையும் அவற்றிற்குப் பின் உள்ள பாம்புகள் அவற்றிர்கிடையேயான தீராத பகையாகவும் காட்டுகின்ற சிற்ப்பு ஞானப் பிரகாசத்தின் தன் அடையாள்ம் என்று சொல்லலாம்.

ஆணிற்கும் பெண்ணிற்குமானப் பிணைபபை அவருடைய ஓவியம் அற்புதமாக காட்டும். ஆணின் அதிகாரத்தைக் குறிக்க ஆண் சித்திரத்தின் வாய்
அகண்டிருப்பதும் பெண் உருவத்தின் வாய் மூடியிருக்கும்படியும் வரைந்து அந்த ஓவியத்தின் அரசியலை உயிர்பெற வைக்கிறார். தாயின் மார்பில் பால் குடிக்கும் மீன் படம் பார்வையளனுக்கு அதிர்ச்சியைத் தந்து அதற்கான அர்த்தத்தை அடைகிற வழியைக் காட்டுகிறது. இப்படி ஞானப்பிரகாசத்தின் நிறைய ஓவியங்களைச் சொல்லலாம்.
இந்த ஓவியங்களில் அவர் கோடுகளுக்குப் பின் பயன்படுத்தும் நிழல்தன்மை
சில இடங்களில் அடர்ந்தும் சில இடங்களில் நீர்த்தும் இருப்பது ஓவியத்தின் கனத்தை இன்னும் கூட்டுகிறது. மூன்று மாடுகள் ஓவியத்தில் ஒரு மாட்டின் வாலே பாம்பாக மாறி மாட்டை விழுங்குவதும் இன்னொரு மாட்டின்  பின் கால்கள் இரண்டும் பாம்புகளாகி மடியில் பால் குடிப்பதும் கற்பனையின் உச்சமான மாயவினோதம் இத்தகைய மாய வினோத ஓவியங்கள் காட்டும் அகநிலை தனிமையின் கோரத்தையும் அது தரும் வலியின் கொடூரமும் இன்னும் நம் கண்கள் முன்னால் அலைகிறது. உதிர்கின்ற இலையைப்போல மிகச் சாதாரணமாக அவரிடமிருந்து வரும் ஓவியக்கோடுகள் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் தன்மையனதாக இருக்கின்றன.

மாடுகளும், மனிதர்களும் மீன்களும் பாம்புகளும் என்னும் சுழற்சியில் ஞானப் பிரகாசம் கட்டும் உளவியல் நிலையானது எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு அவைப் புலப்படாத ரகசிய புற்றுகளைக் கட்டிக் கொண்டே செல்கிறது.

இப்படி மாய எதார்த்த வாத வகையான ஓவியங்களில் தனக்கென தனி முத்திரையினைப் பதிக்கின்றன.

அடுத்ததாக அவரின் நீர்வண்ண ஓவியங்கள். முடிவுறாத கணத்தினை தன் தூரிகையின் மூலமாக அவரால் பிடிக்கமுடிகிறது, கிட்ட இருக்கும் பாறையின் அருகில் நின்று கொண்டு யாருமற்ற கடல் நீர் வெளி முழுக்க கேன்வாஸில் அவரால் கொண்டுவரும்  ஓவியம் அலாதியாநனது.

நீர்வண்ணத்தில் அவர் வரைந்திருக்கும் பெண்ணுடல்கள் ஓர் ஓவியக்கலைஞனின் பார்வையும் அவ்வுடல்கள் பேசும் தனித்த மொழியும் பார்வையாளனை வசியம் செய்யக் கூடியவை.நிலக்காட்ட்சியில் பொங்கும் வண்ணங்கள் அவர் தூரிகைகளின் செல்வகை ஆகியவி சிறந்த கலைஞனுக்கான அடையாள வேலைகள் எனலாம்

இணையத்தில் அவருடைய ஓவியங்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. அக்ரிலிக் ஓவியங்களின் வண்ண அடர்த்தியும் அவை நிர்மாணிக்கும் அரூப தன்மைகளும் நவீன ஓவிய வகைமையின்  வேர்களாக இருக்கும். கொட்டும் அருவியாய் கொட்டும் வண்ணங்களில் வழியும்  உருவங்களை உருவாக்குதல் அவற்றின்மீதான தூரிகை ஆளுமையை செயற்படுத்தி ஓவியங்களைத் தொழிற்படச் செய்யும் ஞானப்பிரகாசத்தின் ஓவியங்கள், அனைத்து வகைமைகளிலும் அவற்றிற்கான இடத்தைக் கோரி நிற்கக் கூடியன.


                                                                (ஓவியம் - ஞானப்பிரகாசம்  ஸ்தபதி)

அடர்ந்த கருப்பும் மெல்லியக் கோடுகளுமாக அவர் நிகழ்த்தும் சில ஓவியங்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்குமானத் தொடர்பினை தன்னியல்பாகக் காட்டுகின்றன. விலங்கௌகள் மனிதர்களைத் தாக்குவதும் மனிதம் அதை எதிர்ப்பதும் இனவரைவியல் அடிப்படையிலானது என்றாலும் மரபார்ந்த விலங்குக்குறியீடு என்பது மானுடத்திற்கு எதிரான தீமைகள் என்றும் அது சமூகம் சார்ந்த தீமைகளாகவும் தனிமனம் சார்ந்த தீமைகளாகவும் இருக்கலாம்  அவற்றைக் கொல்வதும் அல்லது அடக்குவதும் மனிதர்களுக்கான வேலையாகவும் தேவையாகவும் இருக்கிறது என்பதையும் அவருடைய ஓவியங்கள் காட்டுகின்றன. மாடானாலும் புலியானாலும் அவற்றின் குறிகளைப் பிரதானப் படுத்தும் ஞானப் பிரகாசத்தின் ஓவியப்பாணி என்பது நோக்கத்தக்கது. ஒரு நவீனக் கவிதைக்கான இருண்மையும் உள்ளுறையும் இணைந்திருக்கும் அவருடைய இத்தகைய ஓவியங்கள் காலத்தின் சாட்சிகளாக  மாறுவதற்கான சாத்தியங்கள் பல இருக்கின்றன.

பிரபஞ்சத்தின் அத்தனை உயிர்களும் ஆண் பெண் பேதமின்றி அவை வாழத்தகுந்த இடமாக பூமி இருக்கிறது. அவற்றிற்கான வாழ்வியல் தேவைகளை இன்னொரு உயிர்க்குழுமம் சுரண்டாத வரை இயங்கியல் மிகவும் பழுதற்றதாக இருக்கும். இல்லையென்றால் சூழல் பிரச்சினை, ஆண் பெண் பிரச்சினை, சாதி மதம் என்னும் சமூகப் பிரச்சினைகள் எல்லாம் இந்த அண்டத்தின் அழிவைக் கொண்டு வந்து சேர்க்கும் என்னும் பொருள் உணர்த்தும் பல ஓவியங்கள் ஞானப்பிரகாசம் என்னும் மனிதனின் ஆசைகள் அவன் கலைஞனாக இருக்கும் தருணத்தில் எப்படியெல்லாம் வெளிப்பட வேண்டுமோ அப்படியானதொரு வெளிப்பாட்டு முறையிலான ஓவியங்களாக இருக்கின்றன.


மௌனத்தின் மொழியினூடாக செல்லும் இவரின் தூரிகைகளும், சார்கோல்களும் பென்சில்களும் வண்ணங்களும் இன்னும் தூரங்களை நிர்மாணிக்கும்.

                                - யாழன் ஆதி       


மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...