Thursday, 16 November 2017

        

             
           அண்ணன் "ச.முருகபூபதி" மிக முக்கியமான உரையாடல்.

                                       ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

                       கல்குதிரை விதைப்புகால இதழில் வெளியாகியிருக்கும் 
                                 மணல்மகுடியின்  நாடகங்கள் குறித்து



தேரியாள் மண்விலங்கு!
ச.முருகபூபதி சமகால தமிழ் நாடகவெளியில் காத்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் நாடக ஆளுமை.
நாடகமெனும் ஆதி கலையின் வேர்களை மீட்டு,செழுமையாக்கி இன்றைய நவீன உலகின் பார்வையாளனுக்குத் திரட்டித்தரும் தீவீரத்தன்மை கொண்ட இவரது நாடகங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு சர்வதேச நாடக விழாக்களில் பங்கேற்று கவனம் ஈர்த்தவை.
தமிழ் நிலத்தின் தொன்கலையான நாடகத்தை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தி நவீன தமிழ் நாடக செயற்பாட்டை தொடர்ச்சியாக இந்திய அளவில் கவனம் பெறச்செய்வதில் மிகத்தீவரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் குழு இவரது மணல்மகுடி நாடகநிலம்.
மணல்மகுடியின் நாடக கலைப்பயணத்தின் அடுத்த நகர்வாக கோவில்பட்டியில் நிலைத்த நாடக கலைப்பயிற்சிப் பட்டறையை நிறுவி பயிற்சி வகுப்புகள், நாடகவிழாக்கள் என தொடர்ச்சியான கலைச்செயல்பாடுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தொன்கலையான நாடகத்தின் வழி தமிழ்நிலத்தின் தனித்துவப் பண்பாட்டை
அடுத்த தலைமுறையின் நினைவடுக்குகளில் கொண்டுசேர்க்கும் பணியினை முன்னெடுக்கும் நோக்கில் கோவில்பட்டியில் பணிகளில் இயங்கிகொண்டிருந்தவரிடம்
உரையாடியதிலிருந்து.
ஒரு நாடக ஆசிரியனாய் உங்கள் நாடகங்களை எப்படி வடிவமைக்கிறீர்கள்.உங்கள் நாடக செயல்பாட்டுமுறை (Theatrical Process) ஏதேனும் சிறப்புக்கூறுகள் கொண்டதா?
பதில்:
முதலில் நாடகம் கனவாய் என்னுள் கருக்கொள்கிறது. அதை மீண்டும் மீண்டும் காட்சிகளாக்கி விரித்துக் கண்டுகொண்டே அன்றாடத்தில் பயணிக்கிறேன். மீண்டு மீண்டு நிகழ்கையில் காட்சிகள் ஒரு வடிவு கொள்கின்றன. பின் காட்சிகளுக்குள் இயங்கும் நாடக உடலிகளை பொது வெளியில் தேடத்துவங்குகிறேன். தொடர்ச்சியான அலைதல்கள்,பயணங்கள் வழி நாடக உடலிகள் தென்படத் துவங்குகின்றன. பொதுவில் இது பெரும்பாலும் திரளாய் மனித உடல்கள் கலங்கிக்கூடும் விழாக்கள், சடங்குகள் நிகழும் இடங்களாய் இருக்கிறது. இன்றைய மனிதமையம் அழிவுறும் கூறுகள் கொண்ட எளிய மக்களின் சடங்குகளில் பல்லுயிர்க்கொண்ட நாடக உடலிகள் அலைவுற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அலைச்சலில் இசையையும் புனைந்து போர்த்தும்போது என் புனைவுவெளிக்குள் நாடகம் திரள்கிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாய் குழந்தைகளிடம் வேலைசெய்கிறேன். என் புனைவிலிருக்கும் நாடகத்தை கதைகளாக்கி குழந்தைகளிடம் வைக்கிறேன். கேட்க்கும் காதுகளைக் கொண்ட அவர்கள் தங்கள் புனைவில் நாடகத்தை வளர்த்தெடுக்கிறார்கள். அடுத்தநிலையில் பிரதியில் வரிகளோடு நாடகம் ஒரு வடிவு கொள்கிறது. இந்த அடிப்படைப் பிரதியோடு ஒத்திகைநிலம் புகுகிறோம். காட்சிகளை தனித்தனியாய் நடிகர்களின் உடல்கொண்டு வேலைசெய்து பார்க்கிறோம். பண்பாட்டில் வேர்கொண்ட எங்கள் நடிகர்கள் ஒத்திகையில் பிரதியை வளர்த்தெடுக்கிறார்கள். இங்கு நடிகர்கள் பல்லுயிர்க் குரல்கொண்டு நாடகநிலத்தில் பண்பாட்டு நாடகஉடலிகளாய் ஆகிறார்கள். இசை,பிரதி,நிலம், நாடக உடலிகள்,பார்வையாளர்கள் என அனைத்தையும் இணைக்கும் இழையாகையில் பிரதி நிறைவை ஒட்டிய நிலையை அடைகிறது. ஒத்திகையின் வழிமுறையில் இசையும், கூட்டொழுங்கொலிகளும்(chorus) பிரதியின் தேவையுடன் ஒட்டப்பட்டபின் ஒளியமைப்பு தன் பிணைவில் காட்சிகளை நுண்மைகொண்ட முழுமையாக்கி நாடகத்தை நிறைக்கிறது.
இப்படி பிரதி, இசை, காட்சி, ஒளி என பிணைந்த நாடகவடிவுடன் பார்வையாளனைத்தேடி ஆற்றுகைக்கு நாடகநிலம் நுழைகிறோம்.
---------------
நடிகர்கள் முழுவதுமாய் தம்மை இழந்து பிரதியுடன் நிலத்துடன் ஒன்றிக்கரைந்துபோகும் நிலையை உங்களின் நாடகங்களில் காணமுடிகிறது.இதை எப்படி சாத்தியப்படுத்துகிறீர்கள்?
பதில் :
ஒவ்வொரு நாடக நிகழ்வுக்கு முந்திய பொதுவான ஒத்திகை, ஒப்பனை, உடற்பயிற்சிகள் என்பதைத்தாண்டி ஒவ்வொரு நடிகனையும் சகநடிகனின் உடலை,அந்த உடலின் துடிப்பை,வாசத்தை நுகர்ந்து அனைவரும் ஒன்றாகும் நிலையில் ஒவ்வொரு தனி உடலும் நிலையழிந்து பொதுச்சுயத்தை உணர்ந்து கூட்டு உடலாக(Collective Body) கூட்டு மனமாக (Collective Conscious) ஆகும் நிலையை எங்கள் நாடக பயிற்சிவழி சாத்தியப்படுத்தி இருக்கிறோம். இங்கு தன்னிலையழிந்த அனைத்தும் ஒன்றாகிய கூட்டு நாடக உடலிகள் பிறக்கின்றன. இவை அவற்றுள் நிலத்துப்பூச்சிகளின், மிருகங்களின், பறவைகளின், தாவரங்களின் உணர்நிலை வடிவங்களை உள்ளேற்று நாடகநிலத்தில் பிரதியுடன், பண்பாட்டு நாடகப்பொருட்களுடன் பிணைகையில் நிகழ்த்தப்படும் பிரதி உயிர்ப்புக்கொண்டு பார்வையாளனுக்குள் பரவுகிறது.இங்கு பார்வையாளன் தன்னிலையழிந்து பண்பாட்டில் வேர்கொண்ட ஒரு உடலாகி சடங்குப் பார்வையாளனாகிறான். எங்கள் மணல்மகுடி நாடக்குழுவின் தொடர்ச்சியான ஆய்வின்வழி தமிழகம் முழுதும் அலைந்து திரிந்து உள்வாங்கிய நாடக செயல்முறை (Theatre Process) இது. இதை நம் வேர்ச்சடங்குகள் எங்கும் நீங்கள் உணரமுடியும்.சடங்காடியும், பார்வையாளனும் ஒன்றிக்கரைந்து நிற்கும் ஒருநிலை. இதுவே எங்கள் நாடக நிகழ்த்துதலிலும் நிகழ்கிறது.
----------
உண்மையில் நீங்கள் பேசும் இந்த ஊட்டாட்டம் பார்வையாளனுக்குள் நிகழ்கிறதா ?
பதில் :
நிச்சியமாக. எங்கள் நாடகங்களின் பெருவாரியான நடிகர்கள் பார்வையாளர்களுக்குள் இருந்து எழுந்து வந்தவர்களே. இது உங்கள் கேள்விக்கான மேம்போக்கான ஒரு பதில்தான்.ஆனால் நாங்கள் தொடர்ந்து இந்தியா முழுதும் பல்வேறு நாடக விழாக்களில் எங்கள் நாடக நிகழ்வுகளில் பார்வையாளர்களைக் கவனித்துக் கொண்டேயிருக்கிறோம். எழுவது, அமர்வது, நடப்பது, என்ற அன்றாட சம்பவ உடல்களால் சம்பவ மொழியில் நிகழ்த்தப்படும் நாடகங்களில் பார்வையாளன் சலிப்படைந்து போவதை காணமுடிகிறது. இந்தப்புள்ளியில் எங்கள் நாடகங்கள் கூட்டு உடலிகளால் நிகழ்த்தப்படுகையில் பிரதி அதன் மொழிபில், காட்சிப்படுத்துதலில் நிலத்தோடு ஒன்றிக்கலக்கும் கூட்டுடலிகளால் பல்லுயிர் நிலைகொண்டு நிகழும் போது, நாடக நிலத்தில் பிரதி பார்வையாளனுக்கான ஒரு உள்ளார்ந்த புனைவு வெளியை பிரசவிக்கிறது. இங்கு பார்வையாளன் பிரதியை தன் புனைவுவெளிக்குள் இருந்து வாசிக்கிறான். அது அவனுக்கு ஒரு அனுபவத்தைத் தருகிறது. இதற்குள் நாடகத்தின் தொன்ம வேரிசையும், காட்சிப்படுத்துதலும் அவனை இன்னும் ஒரு அதீத மீபுனைவு வெளிக்குள் அமர்த்திவைக்கிறது. இது பார்வையாளனின் அகவெளியை, உணர்நிலையை திறப்பதாக உணர்கிறோம். இங்கு காலனியரேகை படிந்து ஊடக குப்பைகளால் போர்த்தப்பட்டு சலிப்படைந்து கிடக்கும் இளம் பார்வையாளன் அந்த நாடகம் நிகழும் மீபுனைவு வெளிக்குள் தன்னை, தன் தொன்ம வேரை கண்டுகொள்கிறான். இதன்வழி ஒரு பண்பாட்டுப் பார்வையாளன் (Cultural Audience) பிறக்கிறான். அவனும் நாடகநிலமொன்றிய கூட்டுலாகும் போது ஓரு பார்வையாளர் பண்பாடு (Audience Culture) உருவாகிறது. இதை தொடர்ச்சியாக எங்கள் நாடகங்கள் நிகழும் கல்லூரிகளில் இளம் மாணவர்களுடன் உரையாடுகையில் கண்டு கொண்டிருக்கிறோம். ”சூர்ப்பணங்கு” நாடகம் மதுரையில் ஒரு பெண்கள் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. முழுவதும் பெண்களாய் பதின்மக் கல்லூரி மாணவிகள் நிரம்பிய பார்வையாளர் அரங்கு. நாடகநிலத்தில் ஆண் நடிகர்கள் பெண்ணுடல் ஏற்று அணங்குகளாய் நிலம்புகுகிறார்கள். நிலத்தில் அணங்குகள் பெண்களின் அகவெளியை பேசி நிற்கையில், அழுக்குத்துணி, சொளகுகள், உலக்கைகள் என பண்பாட்டுப் புழங்கு பொருட்கள் அணங்குகளின் கருவிகளாகி நாடகநிலம் துடிகொள்கையில் பார்வையாளர் அரங்கு குலவைகளால் அதிர்கிறது. மாணவிகள் தங்களுக்குள் அணங்குகளை உணர்ந்துகொண்டு நிலத்தின் அணங்களோடு பிணைவு கொள்கிறார்கள். நாடகம் நிறைகையில் தன்னெழுச்சியாய் நிலம்புகும் மாணவிகள் விசும்பிய குரல்களோடு உரையாடலற்று பால்பேதமழிந்து நாடகநில அணங்குடலிகளை தழுவிக்கொள்கிறார்கள். இது ஒவ்வொரு நாடக நிகழ்விலும் நிகழும் பார்வையாளர் ஊடாட்டம் இது.
--------------
கதை இல்லாமல் நாடகம் இல்லை என்ற பொதுப்புரிதலில், உங்கள் நாடகங்களில் தனித்த கதையின் அம்சத்தை காணமுடிவதில்லையே ! நாடகங்களில் கதை சொல்வதன் அவசியமென்ன? அது மணல்மகுடியின் நாடகங்களில் எவ்விதம் நிகழ்கிறது.
பதில்:’
கதை என்பதை ஒரு நேர்கோட்டுப் பயணம் என பொதுவில் நாம் புரிந்து வைத்திருப்பதின் எளிய குழப்பம் இது. உண்மையில் கதைகள் நேர்கோட்டுத்தன்மை கொண்டவையா ? எப்பொழுதும் கதைசொல்லி தன் மெய்மையிலிருந்து கதை சொல்கிறான். வாசகன் தன் மெய்மையிலிருந்து கதையை உள்வாங்கி உருவாக்குகிறான். உண்மையில் நாம் பொதுவில் புரிந்துகொண்டிருக்கும் கதை வாசகனிடமே பிறக்கிறது. நாம் அனைவருமே வாசகர்கள் என்பதனால் இதைச் சொல்கிறேன். ”காட்டுல ஒரு சிங்கமிருந்துச்சாம்..” என்று நாம் துவங்கும்போது ஒரு குழந்தை தன்னுள் உருவாக்கும் புனைவுவெளி, கதையின் கதைசொல்லியின் புனைவு வெளியைவிட வீரியமானது. இந்தப்புள்ளியிலே எங்கள் நாடகங்கப்பிரதிகளின் கதைவடிவம் பயணிக்கிறது. நேர்கோடற்ற பல்வேறு அடுக்குகளில் படிமப்பொதிவுகள் (Metamorphic) கொண்ட கதைகூறல். எங்கள் நாடகப்பிரதிகள் பொதுவில் ஒரு கருவைப் பற்றிக்கொள்ளும். நாடகநிலத்தில் பல்லுயிர்கொண்ட கூட்டுடலிகளின் நாடகமொழியில் பரிணமித்து பார்வையாளனின் புனைவுவெளிக்குள் கதைகளை உருவாக்கும். வெறுமையில் நாடகநிலம் ஒரு கதைகொண்டியங்கும், அதற்குள் உடலிகள் கூட்டாக ,தனிதனியாக உடைந்து புரள்கையில் ஒருகதை பிறக்கும், இதனுடன் இசை, நாடகநிலத்தில் இறங்கும் பண்பாட்டுப் பொருட்கள் என அனைத்தும் தங்களுக்கே உரித்தான கதைகளை உருவாக்கும். இது எங்கள் நாடக செயல்முறையில் (Theatre Process) நாங்கள் கண்டறிந்த புதிய கதைசொல்லல் முறை. உதரணமாக எங்கள் குகைமரவாசிகள் நாடகம் சமகால உலகின் நவீன அரசுகள் உருவாக்கும் உள்நாட்டு அகதிகளைக் கருக்கொண்டது. பெருநகரங்களின் கழிவறை மேடுகளில் ,மெட்ரோ சுரங்க புதை குழிகளுக்குள் தள்ளப்பட்டு சுரண்டி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பச்சையமிழந்த உயிர்வாழ்தலின் வாதைகளைப் பேசுகிறது. நாடக நிலத்திற்குள் பூமிப்பந்தின் பல்வேறு திசைகளின்று நுழையும் அகதிகள் கூட்டுடலிகளாய் பல்வேறு கதைகளை பல அடுக்குகளில் பேசிப்போகிறார்கள். அவை நாடக ஆசிரியனுக்குள், நாடக நிலமீண்ட நடிகனுக்குள் பார்வையாளனின் அகப்புனைவு வெளிக்குள் அசைபட்டு கதைகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது. கதை என்பதல்ல அது தரும் அதிர்வை எங்கள் நாடகப்பிரதிகள் கருத்தில் கொள்கின்றன.
----------------
உங்கள் நாடகங்களின் பயன்படுத்தப்படும் இத்தனை கவித்துவமான மொழியின் அவசியமென்ன. இது பார்வையாளனுக்குள் உள்வாங்கப்படாமல் போகும் சாத்தியங்களை எப்படிப்புரிந்து கொள்கிறீர்கள்.
பதில்:
நாம் அனைவரும் பொதுவில் புரிந்துகொள்வது போல மொழி என்பது வெறும் தொடர்பாடல் ஊடகம் மட்டுமா? இந்தப்புரிதல் சரியானதா. நிச்சியமாக இல்லை. மொழியின் ஒவ்வொரு சொல்லும், ஒலிக்குறிப்பும் பெரும் படிமக் கூறுகளைக்கொண்ட சிந்தனைப்பொதிவுகள். மொழியே நம் சிந்தனை. ஆம், ஒவ்வொரு உயிரியிலும் சிந்தனையே மொழியாய்ப் பரிணமிக்கிறது. மொழி மனிதனுக்கானது மட்டுமல்ல. ஒரு கல் தனக்கான மொழிகொண்டே இருப்புக் கொண்டிருக்கிறது. ”கல் தன்னை கல்லாய்” உணர்ந்து கொண்டிருக்கும் என சமணமுனிகள் பேசுவது இதையே. மொழியின் ஒரு சொல் ஒலிக்குறிப்பு நம் காதுகளில் விழும்போது எத்தனை படிமங்களை நாம் புனைந்து கொள்கிறோம். அடர்ந்த வனத்தில் எங்கோ ஒரு பறவை எழுப்பும் ஒலிக்குறிப்பில் ஒரு பழங்குடி மனம் அந்த பறவையின் வடிவத்தை இருக்கும் தொலைவை அடையாளம்கொண்டு பறவையை கண்ணில் காணமல் “இருவாட்சி அலறுகிறது” என சகத்திடம் கடத்துகையில் அடுத்தநிலையாக உரையாடல் மொழி பிறக்கிறது. ஆம் மொழியென்பது வெற்று ஊடகமில்லை. ஒரு மொழியின் ஒரு ஒலிக்குறிப்பை சொல்லாக்கி கடத்த நம் எத்தனை மூதாதைகள் தலை உடைத்திருக்கும் அதை எப்படி எளிதில் கடந்து போகமுடியும். இப்படியே எங்கள் நாடகப்பிரதி தனக்கான ஆழ்ந்த சொற்களைத் தேடிக்கொள்கிறது. ஒவ்வொரு உடலும் அதற்கான மொழியைக்கொண்டே இயங்கமுடியும். பாரதியும், பாரதிதாசனும், ஔவையும் ஒரே மொழி கொண்டவர்களில்லை என எப்படிச்சொல்கிறோம். புறவயத்தில் அனைவரும் தமிழில் எழுதினார்கள் என்போம். ஆனால் ஒவொருவரும் அவர்களின் மொழியில் தமிழில் எழுதினார்கள் எனபதே உண்மை. இந்த நிலையில் நாங்கள் பிரதியை உடல் எனும் போது அது தனக்கான மொழியை தேர்வு செய்துகொள்கிறது.
தானியங்கள்,புழு,பூச்சி,தாவர மிருகமென நாடக உடலிகள் நிலத்தில் உருக்கொள்ளும்போது தங்களுக்கான மொழியாக இந்தக் கவித்துவத்தை தழுவிக் கொள்கின்றன. இப்படி இந்தக் கவித்துவ மொழியே நாடகநிலம்,பிரதி,உடலிகள், பார்வையாளன் என அனைத்தையும் பிணைக்கும் கண்ணியாகிறது. ஆம், “காட்டுக்குள்ளிருந்து வருவபன்” என்பதற்கும் ”கானகம் திறந்து வந்த கூத்தாடி நான்” என்பதற்கும் இடையிலுள்ள அதிர்வை நாம் உணர்ந்துகொள்ள முடியும். அன்றாட சம்பவ மொழியை இந்த பல்லுயிர்க்கொண்ட உடலிகள் பேசுவதை நாம் கற்பனை கூட செய்யமுடியாது. இங்கு பிரதியாகிய நாடக உடலே தன் மொழியை தேர்வுசெய்து கொள்கிறது.
ஒரு கலைவடிவம் தன் மொழியை தேர்வுசெய்தல் என்பதை இன்னும் நுட்ப்பமாக கூத்தில் கவனிக்கலாம். கூத்தில் பயன்படுத்தப்படும் மொழி கூத்தின் வடிவத்திற்கேயான உச்சப் படபடப்பில் வேகத்துடிப்புடன் இருப்பதை காணமுடியும். கூத்து நடிகனின் இந்த நடிப்பு மொழியன்றி கூத்தே வடிவம் கொள்ளாது. கலை ஒரு தேவையில் தன்மொழியை தேர்வுசெய்து கொள்கிறது. எங்கள் நாடகங்களிலேயே கோமாளி சமகாலத்தில் நின்று சம்பவ மொழியில் உரையாடுவதை பார்க்கமுடியும். அது அந்த உடலின் மொழித் தேவை.
இது அனைத்தையும் தாண்டி நம் மூதாதைகளின் நினைவுகளைச் சுமந்துவரும் அந்த மொழி எனும் தொன்மத்தை சந்ததிகளின் பண்பாட்டு நினைவடுக்குகளில் (Cultural Conscious) கடத்திக் காக்கவேண்டிய தேவையும் இந்தக் கவித்துவ மொழி முனெடுப்பில் உள்ளது.
-----------------
சடங்கியல் வாசம் கொண்ட நாடகமொழி எனும் போது ஆற்றல் உந்தப்பட்ட உடல்களின் இயக்கத்தால் பிரதியின் நிகழ்தல் வரையறை தாண்டிப்போகும் சாத்தியமுண்டு, ஒரு நாடக இயக்குநராய் இதை எப்படிக் கைகொள்கிறீர்கள்?
பதில்:
நம்மை வெறும் பாம்பாட்டிகளாக பார்த்த காலனியர்களின் கற்பிதக்கல்வியால்,இன்றைய மையக்குவிப்பு பெருமத சித்தாந்தகளின் வழிமுறையில் இருந்துவரும் போதாமை கொண்ட சிந்தனைக்கேள்வி இது.எல்லா பெருமதங்களுமே தங்களை உலகை பண்படுத்த வந்தவைகளாக பேசிக்கொள்ளும் புள்ளியில் இந்த சிந்தனை நம்முள் எந்தத் தர்க்கமுமின்றி திணிக்கப்படுகிறது.
துடிகொண்டதாலே ஆதியுணர்ச்சிகள் (Raw Emotions), அவற்றின் இயங்குதல் மூர்க்கமானது, வரையறையற்றது என்பது ஒரு அரைப்புரிதல். இந்தக் பிழைப்புரிதலே உலகம் முழுதும் ஆதிக்குடிகளின் மீது அவர்களின் பண்பாடுகள் மீது, அவர்களின் வளங்கள் மீது கொடுமையான அழிவுப்போரைத் திணித்து கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில் இந்த ஆதி உணர்ச்சிகளின் இயங்குதலிலே மனிதமையம் அழிக்கப்படுவதைக் காண்கிறேன். ஆதித்துடிகொண்ட ஒரு சடங்காடியின் உடலுக்குள் பல்லுயிர்களும் உருக்கொள்ளும் நிலையைக் காண்கிறேன். இங்கு மனிதன் என்ற தன்நிலை அழிந்து அவன் நிலத்தோடும் அதன் தாவரங்களோடும்,
பட்சிகளோடும் ஒன்றாகி தொன்ம நிலையை அடைகிறான். இங்கு அவன் மொழியும் செயலும் பல்லுயிர்க்குரல் கொள்கின்றன. ஒரு சடங்குநிலத்தின் துடியுடலை அந்த நிலத்துப் பெண்களின் குலவையும், அந்த நிலக்கருவிகளின் இசையும் இழுத்து கட்டுக்குள் வைத்திருப்பதை காண்கிறேன். இங்கும் நாடகநிலத்தில் அதுவே நிகழ்கிறது. உலகம் முழுதும் இருந்து திரட்டிய ஆதிக்குடிகளின் தொன்னிசைக்கருவிகளின் இசையே நாடகநிலத்தில் அனைத்தையும் இழுத்துத் தைக்கும் இழையாகிவிடுகிறது. இதனோடு அழுக்குத்துணிகள், பொம்மைகள், பனையோலைப் பெட்டிகள்,சொளகுகள், உலக்கைகள் சுரக்குடுவைகள் என நாடகநிலத்தில் புழங்கும் பொருட்கள் அனைத்தும் நம் நிலத்திலிருந்து எடுக்கப்பட்டு நாம் எளிதில் மீறமுடியா பண்பாட்டுப் புழங்கு பொருட்கள் (Cultural Props). இவை நிலத்தோடு பிணைந்து கிடப்பவை. ஆதிக்குடிகளின் தொன்னிசையும் பண்பாட்டுப் புழங்கு பொருட்களும் நாடகம் நிலம்புகும்போது பிரதி நாடகநிலத்தில் தன்வடிவத்தைக் கண்டு தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. இங்கு ஒரு நாடக ஆசிரியனாக இவை அனைத்தையும் நாடகநிலத்திற்குள் பிணைத்துவிட்டு நிகழ்வை அவதானிப்பது மட்டுமே என் வேலையாகிறது.
---------------------
எளிமையாய் நேரடியாய் பேசப்படும் கருத்தாக்கங்களே உள்வாங்கப்படாமல் கடந்துபோகப்படும் தற்கால சூழ்நிலையில் உங்கள் வகையான நாடகங்கள் நிகழ்த்தப்படுவதின் சமூகத்தேவை என்ன?
பதில்:
இலக்கிய வரலாறு நெடுகிலும் காலங்காலமாக கேட்க்கப்பட்டு சலிக்க சலிக்க பதில்பேசப்பட்ட கேள்வி.ஆம் நீங்கள் கேட்பது இலக்கியத்தின் பயன்மதிப்பு யாது? என்பதான ஒரு கேள்வி. நாமும் பேசிப்பார்க்கலாம்.
நாம் மேலே பேசியதைப்போல் எங்கள் நாடகங்கள் மனிதமையம் தாண்டிய பல்லுயிர்களின் குரலாய் ஒலிக்கிறது. பூமி தோன்றிய தொன்காலத்திலிருந்து எத்தனையோ உயிர்த்திரள்கள் அதில் வாழ்ந்து யுகங்களாய் ஆண்டு அழிந்துபோயிருக்கின்றன. இத்தனைக் கொடுமையாய் இயற்கையை சுரண்டி அழிக்கும் ஒரு நிலையை தன்பரிணாம வரலாற்றில் இந்த மனிதமைய காலகட்டத்திலேயே இந்த புவி சந்திக்கிறது.ஒரு மெல்லியதுடிப்பில் நுரைத்தலில் அனைத்தையும் விழுங்கிப்போகும் ஆற்றல் கொண்ட இந்த நிலத்தின் ஆதிப்பொறுமையை எப்படி நாம் பொருள் கொள்ளப்போகிறோம். இதை உணர்ந்துகொள்ள மனிதமையம் தாண்டிய நம்மைவிட இன்னும் உணர்வாய் நிலத்தின் மடி நக்கித் தவழ்ந்து பிணைந்து திரியும் பல்லுயிர்களின் நிலை ஏற்று நாம் நிலத்தை உணரவேண்டியுள்ளது. ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்” என பேசிப்போன தனிப் பெருங்கருணையை எப்படி உள்வாங்கப்போகிறோம். உலகத்தின் ஒட்டுமொத்த வாதையையும் சுமந்து திரியும் விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலைச்சாவில் அழிந்தபின், மரித்த விவசாயக் கபாலங்களோடு தலைநகரின் அரசவை வாசலிலே நின்று மூத்திரம் குடித்த பின்னும் வெறும் செய்தியாக கடந்து போகப்போகிறோமா? மரித்த விவசாயிகளின் காபலங்கள் நாடகநிலத்தில் எழுந்துவந்து பேசும்போது தொன்மம் அழித்து திருடப்பட்ட தானியங்கள்,மரித்த ஜீவராசிகள் பல்லுயிர் உடலிகளில் நின்று பிரதி வழி பேசும்போது தொன்ம மைபூசிய பார்வையாளனின் பண்பாட்டு நினைவுகள் திறக்கப்பட்டு அவன் துடிகொள்கிறான். இங்கு நாடக நிலத்தோடும் அதன் பிரதியோடும் தன்னைப் பிணைத்து வெறும் செய்தியாக கடக்கமுடியாமல், தன்னுள் உள்வாங்கி அசைபோட்டபடி நாடகநிலம் தாண்டிய பொதுவெளிக்குள் நுழைகிறான். இங்கு நாடகம் சமூகத்தின் பண்பாட்டு நினைவுகளை மீட்டு தன் பயன்மதிப்பை அடைகிறது.
---------------
சடங்கார்ந்த எனும்போது உங்கள் நாடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பின், மதத்தச்சடங்கின் எல்லைக்குள் சுருங்கிப்போகும் அச்சமிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? கலை தன்னளவில் அனைவருக்கும் பொதுவில் ஒரு சமநிலையைப் பேச வேண்டிய தேவையில்லையா?
பதில்:
சடங்குகள் என நாங்கள் பேசும் எதையும் நீங்கள் கூறும் நிலவரையறைக்குள்ளோ, பொது மத அரசியலுக்குள்ளோ அடைக்கமுடியாது. நாங்கள் பேசுவதெல்லாம் மதமென்னும் இந்த அரசியல் கருத்துருவம் மனித சிந்தனையில் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முந்தைய தொன்மத்தில் பல்லுயிர்க் குரலுடன் நாடகத்தை வேர்கொண்ட சடங்குகள்.
எங்கள் தொடர்ச்சியான பயணங்கள் வழி பல ஆண்டுகள் ஆய்வில் பகுத்தறிவென நாம் கற்பிதப் போலியாய் புறந்தள்ளும் எளியமக்களின் சடங்குகளில் திகழும் நாடகக்கூறுகளை கண்டறிந்துள்ளோம். இது இன்று நாம் வரையறுக்கும் நிலம்,மொழி,சாதி,மதம் என குறுகிய எல்லைக்கோடுகள் அனைத்தையும் அழித்து நிலத்துப்பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் ஒன்றாகி இயற்கையுடன் ஒப்புக்கொடுக்கும் முழுநிறை நிலையை தன்னுள் கொண்டு ஆதி நாடகத்தின் வேர்க்கூறுகளைக் இன்னும் கொண்டிருக்கும் எளியமக்களின் சடங்குகள் (Subaltern Root Rituals). உண்மையில் மதமும் சாதியும் என்றுமே எளிய மக்கள் பண்பாட்டிற்கு எதிரானவை.
போரும்,கொலையும் மட்டுமே பிழைத்திருத்தலின் வழி என புனித விழுமியமாய் இருந்த ஒரு சமூகப்பண்பாட்டில் ”யாதும் ஊரே,யாவரும் கேளிர்” என்று பேசிய மூதாதை ,தமிழில் பேசியது என்பதற்காகவே, தமிழ் என்ற குறுகிய நில அடையாளத்திற்குள் அதை அடைக்கமுடியுமா ? அது உண்மையில் அந்த மொழிதலுக்கே எதிரானதில்லையா..!
கோள்களைத்தாண்டி ராக்கெட்விட்டு நாகரிகமடைந்துவிட்டதாய் கூறிக்கொண்டு குழந்தைகளின் தலையில் குண்டெறியும் தற்கால நாகரிகர்கள் கூட சிந்திக்க முடியாதா மானுடத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழிந்த உலகார்ந்த மானுட தத்துவமில்லையா அது. அதை எப்படி ஒரு வரையறைக்குள் அடைப்பீர்கள். இந்த சிந்தனையை ஒட்டியதே நாங்கள் பேசும் சடங்குகள்.
தவிர நாங்கள் கண்ட,கேட்ட எந்தச் சடங்கையும் நேரடியாக நாடகநிலம் ஏற்றுக் கொண்டதில்லை. சடங்கின் நாடகக்கூறு மட்டுமே பிரதியோடு இணைந்து நிலத்தில் பிரதிபலிக்கிறது. இது நம் தற்கால கல்வியியல் புலங்கள் அனைத்தும் நாடகமென கட்டமைத்திற்கும் கற்பித நாடகக்கூறுகள் அனைத்தையும் உடைத்தெரிந்து வேறொன்றாய் நிலத்தில் நிற்கிறது. இங்கு நாடகம் சாதி,மதம்,மொழி,தேசமென வரையறும் பொது எல்லைகள் அனைத்தையும் காலிசெய்து சடங்கியல் மொழிகொண்டிருக்கும் எழுதப்படாத மீபுனைவுப் புத்தகத்தை பிரபஞ்சம் முழுமைக்குமாய் திறக்கிறது.
இதில் நாடக ஆசிரியன்,நடிகன், பார்வையாளன், பிரதி, இசை, நிலம், நாடகப்பொருட்கள், தானியங்கள், பூச்சிகள், தாவரங்கள்,பறவைகள், மிருகங்கள் என அனைவரும் அந்தப் புத்தகத்திற்குள் ஒன்றாய் அமர்ந்து தங்களின் அடையாள எல்லைகள் அழித்து தங்களையே வாசிக்கத்துவங்கிறார்கள். நாடகம் எல்லையற்றதாகிறது.
--------------------
இறுதியாக,உங்கள் நாடக பார்வையாளனுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது..
நம் அனைவரின் தனித்துவ அடையாளங்கள் ஒற்றைப்படையாய் முடக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்படும் சமகால அரசியல் சூழலில் நாடக ஆசிரியன் நடிகன், பார்வையாளன் என அனைவரும் தொன்மத்தில் வேர்கொண்ட நம் பண்பாட்டு நினைவுகளைத் (Cultural Conscious) திறந்து சமூகத்தின் உறுப்புகளாய் எதிர்கால அரசியலுக்கான (Future Politics) பண்பாட்டு உடலிகளாய் எழுந்து நிற்கவேண்டும். நாடகநிலத்தில் பிரதி எப்பொழுதும் மறைந்துபோன தானியங்களுக்காய், மறந்துபோன தாவரங்களுக்காய், மிருகங்களுக்காய் வண்டினங்களுக்காய் தன் பல்லுயிர்க்குரல் கொண்ட சடங்கியல் மொழியில் பேசிக்கொண்டே இருக்கும்.
நன்றி.

                                ( ஓவியம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி)








Friday, 3 November 2017

                                                    

                                                     சபரிநாதன் இரு கவிதைகள்
                                                       ========================
                                            

(Painting - Gnanaprakasam Sthabathy)



காந்தி ஆசிர்வதிக்காத குழந்தைகள்
  -------------------------------------------
அட்டனக்கால் போட்டபடி இது என் தாத்தா சொல்லியது:
எனையள்ளி எடுத்துக்கொண்டு ஓடினார் என் தாத்தா
ரயிலடியில் இன்னும் அதிர்ந்துகொண்டிருந்தது தண்டவாளம்
ரயிலோ காந்தியை ரொம்ப தூரம் கடத்திப் போய்விட்டது
என் தாத்தா ஒரு சர்பத் குடித்துவிட்டு
வந்து கொத்தத் தொடங்கினார் மீதி அம்மிக்கல்லை.

அவர் மட்டும் கொஞ்சம் விரசாய் ஓடியிருந்தால்
அவர் மட்டும் கொஞ்சம் தாமசித்திருந்தால்..
இப்படித்தான் எல்லோருமாய் சேர்ந்து
நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.




                                                               அன்பின் வழியது
                                                           ------------------------------
எனை நேசி என்பதை
எத்தனை சத்தமாக சொல்ல வேண்டியுள்ளது
தொலை மரத்திலிருந்து பட்சிகள் பதைத்து பறக்கும் அளவுக்கு
கார் கண்ணாடிகள் கீறல் விட
சீதனச் சின்னங்கள் விழுந்துடைய
மற்றெல்லோரும் காதைப் பொத்திக் கொள்ளும்படி
அத்தனை சத்தமாக, நாம் சொல்வதை நாமே கேட்கமுடியவில்லை.

ஒருவரை அடிமை செய்வதற்கு
எத்தனை முறை காலில் விழுவது
தாகத்தின் நீச்சு நமைத் தாண்டி உயர்கையில்
ஆக்ஸிஜன் உருளையைக் கட்டிக்கொண்டு சுவரேறி குதிக்க வேண்டும்
பரிசுப்பொருட்கள் குட்டிக்கரணம் உண்ணாவிரதம்
வாக்குறுதிகள் பொய்கள் அழுகை பாவனை அரக்கு முத்தங்கள்
ஒன்று அடிமையாக வேண்டும் அல்லது அப்படி நடிக்க வேண்டும்.

அன்பைப் பரிசோதித்துப் பழகியிராத
பால்கன்னி ஆடுகளின் காலம் அது
கால் ஊன்றிய பதமழை இரவு
நானும் தம்பியும் படுத்துக்கொண்டோம்.அம்மா வந்து
ஒரு பழைய சேலையால் எம்மிருவரையும் போர்த்தினாள்
அப்பொழுது நான் நினைத்தேன் இனி
எந்தப் பேய்களும் எமை அண்டமுடியாது என்று.






Sunday, 4 June 2017




ஞானப்பிரகாசம் ஸ்தபதி: தமிழ் நவீன ஓவியத்தின் அடையாளம்.


               publishing in Pudhuezuthu magazine
                             Thank you: Manonmani Pudhuezuthu

யாழன் ஆதி


(ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

மேற்கு வானத்தின் இளஞ்சிவப்பு நிறத்தைத் தோற்கடித்து நீலம் நீர்வண்ணம், தாளில் பரவுவதைப் போலப் பரவுகிறது. அதன் ஆளுகையில் வானம் பெரிய ஓவியப்பரப்பாகத் திரள, மேகங்கள் தங்கள் ஓவியங்களை நிர்மாணம் செய்ய ஆரம்பிகிக்கின்றன. தன்னுள்ளத்திலோ அல்லது அருகிலிருக்கும் அம்மாவிடத்திலோ அந்தக் குழந்தை மேகத்தின் தன்னிலை ஓவியத்தைப் பார்த்து அதற்குத் தெரிந்த உருவத்தின் ஞாபகத்தில் ஒன்றைச் சொல்ல அந்தக்குழந்தைக்கு ஓவியம் அறிமுகமாகிவிடுகிறது.

ஓவியங்களை மனித மனத்தில் இயற்கையின் கைகளே முதலில் வரைகின்றன. மாறும் வானத்தின் வண்ணங்களும், பூக்களின் வண்ணங்களும், இயற்கையின் பேராற்றலால் தோன்றும் வடிவங்களும் ஓவியங்களின் முன்மாதிரிகள் என்ற நிலையில் ஓவியம் இயற்கையானது என்பதும் அதனால்தான் அந்தக் காலத்தில் எழுத்துக்கள் ஓவியங்களாக இருந்தன என்றும் நாம் அறியலாம். ஆக எழுத்துக்கு முந்திய ஒரு இயற்கைக் கலை வடிவ வெளிப்பாடு ஓவியம்.

ஒரு படைப்பாளனுக்குத் தன் படைப்பின்மீது குவிகிற கண்களும் அந்த கண்களின் வழி வழிகிற தன் ஓவியங்களும் மிகவும் முக்கியமானவை. அது ஒரு எழுத்தாளனுக்கு நேரக்கிடைக்காத அம்சம். ஓர் ஓவியம் தன்னளவில் ஆற்றக்கூடிய வேதியியல் மாற்றத்தை வேறு எந்தக் கலைவடிவமும் ஆற்றிவிட முடியாது. அத்தகைய வலிமை வாய்ந்த அந்த வடிவத்தைக் கையாளும் படைப்பாளியின் நுணுக்கமானப் பார்வையும் அவர் கடத்துகிற நுண்ணரசியலும் மிகவும் ஆற்றலுற்றவை. ஒவ்வொரு நாட்டிலும் அத்தகைய ஓவியக்கலைஞர்கள் தங்கள் படைப்புலகத்தை ஒரு கலகச் செயல்பாடாக மாற்றியிருப்பதை வரலாற்றின் வழிநெடுக நாம் காணலாம்.

தமிழிலும் அப்படியொரு பட்டியல் உண்டு.ஓவியத்தில் தீவிரமாக இயங்கக் கூடிய படைப்பாளிகள் காட்டும் உலகம் அவர்களின் பார்வையைத் தாண்டியதாக நிகழும் அரசியல் வெளிகளைத் தன்னுள் வாங்கி அதுதரும் வண்ணங்களின் வெளியில் தன்னை நிகழ்த்தும் கலைஞர்கள் தமிழுலகத்திலும் காலத்திற்கேற்ப வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிகைகள் நகர்ந்து வெகுஜன அமைப்பையும் அடக்கத்தினையும் கொண்டு நடுத்தன்மை ( Middle ) என்ற நிலையை அடைந்திருக்கும் இச்சூழலில் வெளிவரும் ஒரு சில சிறந்த இதழ்களில் தன் வெளிப்பாட்டை ஓவியங்களாக ஆற்றிக்கொண்டிருக்கிறார் ஞானப்பிரகாசம் ஸ்தபதி .

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல நிலைகளில் பார்வையாளரை அவரளவில் மீள் உருவாக்கம் செய்து படைப்பாளித் தன்மயுடன் மாற்ற வல்லவவையாக இருக்கின்றன. பல இதழ்களின் வெளிப்படும் அவரின் கலையாக்கங்கள் மிகவும் உன்னதமாக தமிழ் ஓவியப்பரப்பில் அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கான பலங்கள் மிகுந்ததாக மாறிக்கொண்டிருக்கின்றன.

ஒரு கதைக்கோ அல்லது கவிதைக்கோ அந்தந்தப் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களையோ அல்லது கருவினையோ நேரிடையான ஓவியங்களாக மாற்றிவிடும் தன்மையுடன் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் அமைவதில்லை என்பது அவரின் தனித்தன்மை. அந்தக் கதையை அல்லது கவிதையை உள்வாங்கிக் கொண்டு ஓவியமாக வெளிப்படும் தன் சிந்தனைகளை அவர் தன் விரல்கள் வழியே வழியவிட நமக்குக் கிடைக்கும் பிரதிகள் தனித்தன்மையாக மாறிவிடுகின்றன.யதார்த்தவாதக் கதைச்சொல்லலுக்குக் கூட ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்றிவிடும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.


அவரின் படைப்புகள் பெரும்பாலானவை கோடுகளால் உதிர்க்கப்படுகின்றன. தன் ஓவியங்களில் அவருக்கு இருக்கும் வேட்கையின் அளவுகளாக அவர் ஓவியங்கள் இருக்கின்றன. மனிதர்களையும் மிருகங்களையும் இணைத்து அவர் காட்டும் ஓவிய வெளிகள் பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன. ஓவியப்பிரத்தியின் எந்த இடத்திலும் தொடங்கிவிடும் மனித உருவம் அது காட்டும் தன்மையின்மூலமாக அந்த உடலில் எழும் வாசனையோ கவிச்சியோ அல்லது காமமோ ஆன்மீகமோ ஓவியத்தின் மீதிப்பகுதியில் வந்து சேர்ந்துவிடுகிற லாவகம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவிய வலிமையாக மாறிவிடுகின்றன. கருப்பு வெள்ளைப் பகுதிகளாக அவரின் ஓவியங்கள் சில இருண்மைகளைப் பொதித்துக் கொண்டு பார்வையாளருக்குக் காட்டும் காட்சிகள், கோட்டின் அடர்த்தியும் மெலிவும் சிலநேரங்களின் நிகழ்த்தும் கலவைகள் மனதிற்குள் சென்று பார்வையாளரை கிறங்க அடிக்காமல் அவரை மீண்டும் ஓவியத்தைப் பார்க்க வைக்கின்ற கோரலை அவர் ஆக்கம் செய்துவிடுகிறது.

                                              ( ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)



நீக்ரோ மக்கள் தங்கள் விடுதலைக்கு அவர்கள் உடல்களையே ஆயுதமாகப் பயன்படுத்தியதைப் போல, பெண்கள் தங்கள் உடலை வைத்து விடுதலை அரசியலைப் பேசுவதைப் போல ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் எங்காவது ஓரிடத்தில் மனித உடலைக் கொண்டு இயங்கக்கூடியனவாக இருப்பது அவருடைய தனிப்பான்மை. மனித உடல்மூலம் அவர் வெளிப்படுத்தும் அவலங்கள் அல்லது வேட்கைகள் பார்வையாளனுக்கு அதுவரை கிடைத்திராத அனுபவத்தைத் தரக்கூடியன.

படம் எடுக்கும் பாம்பின் உருவத்தோடு சற்றுப் பொருந்துகிற முக அமைப்பும் கழுத்து பாம்புன் வாலாகவும் கைகள் பாம்பாகவும் உடல் ஆணுடலின் உறுதியோடும் ஆனால் இரண்டு முலைகளோடும் கால்கள் உணர்நீட்சிகளாகவும் அமைந்திருக்கும் ஓர் ஓவியம் சர்ரியலிசத்தின் மிக முக்கியச் சாட்சியாக நாம் கொள்ளக் கூடியது. இந்த உருவம் காட்டுகின்ற படிமம் ஒரு கவிதையின் புனைவில் சொல்ல முடியாததாக அதே நேரத்தில் அத்தகைய வீரியம் மிக்கதாக ஓவியத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஓவியத்தை ஒரு பார்வையாளர் எப்படி எதிர்கொள்வார்? அவருடைய மனநிலையை ஓர் அமானுஷ்யத்தன்மைக்குத் தள்ளி, இத்தகைய ஒவியம் காட்டும் பிம்பம் அவர் சார்ந்ததாக அல்லது அவருடைய இயல்பானதாக அல்லது அவர் பார்த்திராத கேட்டறிந்தவற்றை அசையாக நினைவு வாய்கள் மெல்லுவதற்கு சாதகமாக அமைகின்றன. ஆண் பெண் கொண்ட உருவ அமைப்பு உலகின் பூர்வாங்க ஆற்றலாக வெளிப்படும் பிரபஞ்சத்தின் கதிர்களை தன்னுள் வாங்கி வாழும் மானுட சமூகத்தின் இருப்பாகவும் தலையும் கைகளையும் பாம்பாக அவர் வைத்திருப்பது ஆதியின் ஓலமாக இருக்கின்ற பாம்பின் நீட்சியில் மனிதர்கள் தொடர்ந்த எச்சமாக இருக்கின்ற சிந்தனைகளும் செயல்களும் சுட்டப்பட்ட ஓர் ஆன்மீகத்தின் வெளிப்பாடாக அந்த ஓவியம் அமைந்திருக்கிறது.

புலியின் பின்னணியில் ஒரு ஆதிவாசிப் பெண் ஓவியம். பெண் இந்த பூமியின் முதலாக இருக்கின்றாள். அவளே ஆதிகாட்டின் தாயாகவும் அவளே அவற்றையெல்லாம் பரிபாலிக்கும் நிறைசூலியாகவும் எப்போது இருந்திருக்கிறாள். ஆனால் காலத்தின் மிக் அண்மையில் அவள் இந்தச் சமூகத்தில் எத்தகைய நிலையில் இருக்கிறாள் என்பதை மிகவும் தத்ரூபமாய்க் காட்டும் ஓவியம் அது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் கர்வமும் உருவ அமைப்பும் பின்னணியிலிருக்கும் புலியின் பயமும் பெண்ணே உலகின் ஆகப்பெரும் சக்தி என்பதைக் காட்டுகின்ற காலத்தின் முட்களாக இருக்கின்றது. பெண்நிலைப் பயணத்தில் இன்று பெண்களின் நிலையை இந்த ஓவியம் தன் இருப்பைத்தாண்டி பேசுகிறது. தலை கவிழ்ந்து நாக்கு நீண்ட புலி அந்த ஆதித்தாயின் வீரத்திற்குள் அடிபணிந்திருக்கிறது, வீரமும் நிமிர்வும் மதர்ப்பும் நிறைந்த பெண் சித்திரம் வெற்றிக் களிப்பில் இருக்கிறது. இந்த ஓவியம் ஓரளவு நேரடித்தன்மைக் கொண்டிருந்தாலும் அதில் இருக்கும் கருமையாக்கப்பட்ட இடங்களும் ஒளியூட்டப்பட்ட இடங்களும் நிகழ்த்தும் முரண் நிலையில் அந்த ஓவியம் அதற்கான இடத்தை அடைந்திருக்கிறது.


( ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)




ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் நாம் காணவேண்டிய மிக முக்கிய அம்சம் கைகளை அவர் பயன்படுத்தும் தன்மை. அவரின் கைகள் மிகவும் வலிமையானவையாக இருக்கின்றன. ஒரு ஓவியத்தில் விரல்கள் மடக்கி நிலத்தில் ஊன்றுவதைப் போன்ற வலிமையுடன் ஓவியம் மிக அருகில் (Close up) இருந்து தொடங்கி அந்தக் கை ஓர் அருவமாக மாறியிருக்கும். இந்தக் கைகயும் அது ஊன்ற எத்தனிக்கும் நிலமும் பேசும் நுண்ணர்சியலை எப்படி வேண்டுமானாலும் விளங்கிக்கொள்ள முடியும். இத்தகைய வலிமை உள்ள கை ஊன்றுவதற்கு நிலமற்ற தேசத்தில் அந்தக் கையின் உடலும் மற்றவைகளும் அருபமாய் மாறிவிடுவது ஓவியத்திற்குள் அவர் வைத்திருக்கும் ஒரு போராட்டத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.

ஒரு ஓவியம் காலின் வலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அந்தக் காலே ஒரு மனித உருவமாக மாறி, அதன் வயிறு வெடித்து அந்தத் திசையிலிருந்து குழந்தைப் போன்ற ஓர் அருவம் தோன்றி அந்த ஓவியம் நிகழ்த்துகிற கலைவெளிப்பாடு அற்புதமானது. கால்களும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்களில் அதிகமாக இடம்பெறுகின்றன. நிலத்தில் பதிந்த ஒற்றைக்கால் அதற்குமேல் இரு உடல்கள் இணைந்திருக்கும் ஓவியம் புலப்படுத்தும் பிரதிமைகள் கற்பனையின் மீநிலையில் இருக்கின்றன.

ஒரு மானும் ஒரு மனிதனும் இருக்கிற ஓவியம் சிறந்த ஒன்று. கோடுகள் ஓர் ஓவியத்திற்கானக் கூறுகளைக் கொண்டிருக்க, அதற்குள் அவர் பயன்படுத்தும் நிழல் பிரதேசங்கள் இன்னொரு ஓவியத்திற்கானக் கூறுகளோடு இயங்குகிறது. ஞானப்பிரகாசம் கருமையைப் பயன்படுத்துகிற விதம் அவரின் ஓவியங்களை மேலும் வலிவுள்ளதாக மாற்றுகின்றன. அதே நேரத்தில் நவீன ஓவியபாணியில் ஒரு முக்கியமான இடத்தையும் அவருக்குத் தருகின்றன. ஒரு பெண் கோட்டுருவம். மிக எளிமையாகக் கோடுகளைக் கொண்டது. அதற்கு பின்னால் கருமையில் ஒரு மனித உருவம் தோன்றும். அதற்குக் கீழே ஆணுடைய முகம். மூக்கின் வழியாகச் செல்லும் கோடு வளர்ந்து ஓர் ஓவியமாகி முன்னிருக்குமிரு உருவங்களையும் அது கண்காணிக்கும் ஓரு உருவமாய் மிதக்கும். இந்த ஓவியம் மனசாட்சியின் வரைபடமாகக் காட்சியளிக்கிறது. மனிதர்கள் இந்த வாழ்வில் அடைய வேண்டிய அமைதி, அமைதியின்மை. வறுமை செல்வம். பிறப்பு இறப்பு என்னும் இருமையில் வாழ்வெ அங்கிங்கு என்று அல்லாடும் சூழலில் கொஞ்சம் கோடுகளையும் கருமையயும் வைத்து அதைக் கூறிவிடுவது மிக அருமையான ஓவியமாகத்தான் இருக்கும்.


( ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)



சிவபெருமானை அவதானிக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி உணர்வுநிலை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கன. ஆண்பெண் உடல்களடங்கிய சிவநாதன் ஓவியங்கள் சிவனின் ஆன்மீகத் தன்மையை மீறி, இந்த உலகம் இயங்கும் முரண் அமைப்புகளைப் பேசுவதாகவும், ஆண் வயிற்றிலிருந்து பெண் வயிற்றிற்கு உயுரணுக்களைத் துப்பும் படைப்பின் அதீதமும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகின்றன. இன்மை இருப்பு என்னும் தன்மைகளில் இன்மைகளை கருப்பாகவும் இருப்பை கோடுகளாகவும் காட்டும் அவரின் கூர்தன்மையனவாக வாய்த்திருக்கின்றன.

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் அனைத்தும் அவரின் உணர்வுநிலையிலிருந்து உருவாக்கப்படுவையாக நம்மால் கணிக்க முடியும். கதை, கவிதை என எல்லாவற்றையும்விட ஓவியத்தை படைப்பின் மூலாதாரமாக மாற்றும் அவரின் தன்மை இன்றையத் தமிழ் சிறுபத்திரிகைகள் மட்டுமல்ல நவீனத்தினை வேண்டும் அனைத்து பத்திரிகைகளிலும் தொடர்ந்து வெளிவருவது என்பது மிகவும் நல்லதாகவே படுகிறது.

நுண்மை நிறைந்த அவரின் ஓவியங்கள் அவரின் முந்தையத் தலைமுறைக்கும் அவரின் பிந்தைய தலைமுறைக்கும் ஒரு தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. அவரின் கோடுகள் வேயும் கைகள் தமிழிலக்கிய புலத்தில் மட்டுமல்ல உலக அளவிலான ஓவியங்களின் வரிசையிலும் நிறுத்தப்பட வேண்டியவை என்பதனை அவரின் ஓவியங்கள் தொடர்ந்துப் பேசி வருகின்றன. ஞானப்பிரகாசம் ஸ்தபதி தமிழ் நவீன ஓவியத்தின் அடையாளம்.


மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...