(Drawing - Gnanaprakasam Sthabathy)
இரண்டு உள்ளங்கைகளிலும்
மருதோண்றிக் காடுகளை
நீ விரித்துக் காட்டுகிறாய்
உன் விரல்களில் ஊன்றிப்பதிந்த
சிவப்புப் பயத்தம் விதைகளை
குருவிகள் கொத்தி மகிழும்...
அதன் கீச்சொலிகள்
உரத்து மோதுகின்ற வேளையில்
திருப்பி...
கைகளை மடித்து மூடுகின்றாய்
மருதோண்றிக் கைகளில் மறைந்துள்ள
சாத்திரக் குறிகளை
நீ உறங்குகையில் வாசித்தறிகிறேன்
மருதாணிச் சாயமேறிய கைகளில்
ஒளிந்து கொள்ளும் பொருட்டு
துளைகள் உள்ளன
மலைப் பாம்பு...
மண்குவியலில்... ஓய்வெடுப்பதைப் பார்க்கிறேன்
எறும்புப் புற்றுகள் கட்டிய “மசுக்கொட்டை“ மரத்தில்
சிவப்பும்... கருநாவலுமாய் கனிந்திருக்கிற
மசுக்கொட்டைப் பழங்களை ஆய்கிறேன்
உயரமான கால்களால்
வெட்டுக்கிளிகள்...
வலது கைக்கும்... இடது கைக்குமாய் தாவுகின்றன
ரேகைகள்... நீர் சுரந்து
வால் ஆமைக்குஞ்சுகள் தெத்தும்
மூன்று பூச்சந்திக் கரைகளையும்
வெண்குருத்து நகங்களை மூடி
சிவப்புத் தொப்பிகள் போட்ட சிப்பாய்கள்
கண்காணிக்கின்றனர்
இறைவனைத் தொடுவதும்...
மருதாணி இடுவதும்...
ஒன்றென்கிறாய்
சித்திரப் புதையலை
கண்மூடாது... காவல் செய்கிறாய்
எப்போதும்
மருதாணிச்சாறு ஊறியிருக்கும்
மருதாணி வரைவோவியங்கள்
உன்னையே மருதாணிச் செடியாக செய்கின்றன
பிந்திய நள்ளிரவு
மருதாணி அரைத்துக்கொண்டு வரும்
நிலவும்... அவளும்...
மருதாணி இட்டுக் கொண்டிருந்தார்கள்
--- Anar Issath Rehana
No comments:
Post a Comment