Thursday 5 September 2013


கோணங்கி "த" நாவல் 
-----------------------------------------------------

ஓவியம்

(ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

சேவலின் எலும்புவாக்கு இன்றி வேறொரு உடலுக்குள் இன்னொரு உயிர் செல்லாது என்றான் மை இருட்டில் இருந்த ஒடியன். கல்லை அலைந்தொழிக்கும் ஆறு உறுமியது. வெகுண்டெழும் பேராந்தைச் சேவல் ஒடியன்ம லையில் இருந்து உருளும் ஓசையில் மாறிமாறி எதிரொலி. முடிவற்ற வட்டவட்டங்களாகச் சுற்றிசுற்றி வந்த குருட்டுச் சேவலுக்கு நண்டின் ஊணை ஊட்டிய நெற்றொடியன் கட்ட ஒடியனோடு தலைமுறை பலவாகியும் வயதுமாறா தேகஒளியிழக்காமல் வாழ்ந்தனராம். முன்னரே உறங்கி முன்னரே சேவலுடன் எழுந்துவிடும் பழக்கம். ஒடிமலையில் மேழகத்தகரோடு கிடாயோடு நாய்களும் சுழன்று திரியக் கடுவா கிடந்துபோன கல்லளைகளே இவர் தம்குடி. அங்கே தேடிவந்த ஜாடிக்காரர் கூட்டம் ஒடியன் கல்லளைகளிலேயே இராத்தங்கல் ஆகாது. பல்லியடிப் பக்கேட்டு தள்ளியே வருகிறார்கள். மயிரடர்ந்த தோற்கட்டினை தழும்புகள் மூடும். கான்திரியும் பூருவ இருடி உடல்மேல் பூக்கள் குமிழ்வதைப் பார்த்தான். சிவலைப் பறவையின் தலையும் றெக்கைகளும் ட்ராகனின் வாலையும் இருகாலையும் நெருப்புயிர்க்க ஓடித்தாக்கும் பூதவேதாளப் புள்ளுரு இந்த ஒடி. தகர்விரவிய செம்மறித்திரள்வெள்யாட்டுத்திரளோடேகலந்துகட்டிகொம்புகள்முட்டிஒடியும்.செம்மறிக்கிடாயின் கொம்பெனத் திருகிக் கடைசுருண்ட தலைமயிர் சுருளும் புள்ளிகளும் ஒடியர் தோற்றம் யாரை விடவும் கட்டையானதாம். ஒடியனும் சொக்கையும் ஒன்னாத்தூங்கியதில் எல்லாக் கலையும் மயங்கி இருக்கும். இலைச்சாயம் பூசிய கல்லளைச் சித்திரமரபு தூங்கும் இருட்டில் கரையும்.ஒருவர் தூங்கியே ஓவியத்தைப் பார்த்துவிடலாம். கபாலம் சித்திரத்தின் ஒருபகுதி. வேறுவேறு வகையினவாய் ஒடிமலைவாழ் வருடைகளின் கொம்புகள் பொருந்திய இளையதகர்களின் ஒலிமுட்டி எழுந்துநிற்கும் தற்கணச் சிற்பம்.ஒடிந்தகொம்பும் செம்மறித் திருக்கை மோதி உடைந்த சிற்பம் எரியும் வெளிச்சம். மேழகத் தகரும் ஞமலியேற்றையோடு குதித்து விளையாடினாலும் தூங்கும் கட்டஒடியனை எழுப்பமுடியவில்லை. இருடிமேல் குக்குட சர்ப்பம் கால்பதிக்க நாசிமேல் சிறகுவிரித்து புரூரம் விண்பறக்கும் இரத்தநரகி நீரில்படாமல் பறந்தவாறு பனந்தோட்டைச் செருகி வெறியாடும் குரவைக்கூத்திலும் அயர்ந்து தூங்கினான்.

வாதை ஒலிக்கும்ஒடியன்பாதை தெரிந்தும் தெரியாத காலங்களில் பயணிப்பது. இந்த ஒடியன் தன் குத்திட்ட பார்வையால் ஒருவரை உற்றுப் பார்த்த உடனேயே இந்தவெளி எந்தவெளியில் இருக்கிறதென்று காலக்கணிப்பிற்கு அப்பால் சலனமுறுவர் எனச் சொன்னதும் காக்கை.

ஒடியன்அகலவிழிகளால்நேரத்துக்கொருஉணர்பரப்பில்அலைபாய்வதுசட்டெனப்புலனாவதில்லை.அவனைப் பார்த்ததாகச் சொல்வதெல்லாம் கட்டுக்கதை.

ஒடியனுக்கு மையலுறத் தெரியாது. இயல்பே குழந்தை. அதிகவயதிலும் குழந்தையாகவே வாழ்ந்தான். ஒடியன் பலநாள் தூங்குவான். தானா விழுந்த கல்மரங்களில் இருக்கிறான். நீண்டகால தேரைவிழுந்த கல்லினைச் சிற்பிக்கு ஆகாது. கல்லில் தேரை இருப்பது ஒடி இடம். தேரையின் ஈரஒடுக்கம் ஆழக்கல்லுக்குள் மோனத்தில்இருப்பதும் சிற்பம்.. தேரையைக் கலையாக்கினான். அனாதைப் பிணங்களில் கபாலம் எடுத்து சித்திரகபாலமாக்கும் ஒடியனைப் பயந்த்து காடு. இல்லாதவர்களும் தூங்குகிறார்கள் ஒடியனோடு. அணிகலன் நெகிழ விம்மியழும் பேய்மகளிர் கடுங்காற்றில் பொற்காசுகள் உதிர்ப்பக் கூடிவருகிறார்கள். பாம்பு ஓடிநெளியும் ஆறறல்மணலில் கால்பதித்து வர இடைஇடை அழிப்பாங்கதை. அறல் மணலிடத்தே சேவல் பாதங்கள் செறிந்துள்ளதை உற்றாள் ஒருத்தி. செல்லும்வழி இருட்டில் சித்திரகபாலம் ஒடியன்குகை. இறந்தவர்களே காணமுடியும். ஒவ்வொரு கபாலமும் ஒரு குகை. குடியத்தில் சித்திரமழிந்த கபாலத்திரள். அந்தமலைக் கற்கருவிகள் விழுந்துகிடக்கும் சிற்பப் பட்டறை. கபாலத்தோடு கல்லாயுதம் இணைத்தால் இசையும் சித்ரகபாலமும் தோன்றும். உறக்கத்தில் காமமும் பிறழ்வும் ஆழத்தில் நிர்வாணமாய்ச் செல்கிறார்கள். மிருகங்கள், தாவரங்கள் உடுக்களோடு சேர்ந்திருக்கும் இடைவெளியில் ஒடி தூங்குகிறான். உடுக்களுடன் ஒடியன் தூக்கம் வேகமானது. நட்சத்திரங்களின் ஒளிவருடங்களில் சந்திக்கிறான் உன்னையும். மிகப்பெரும் அந்தகாரத்தில் இருளிப்படர்ந்து துயில்தல். யாரும் பார்க்காத இருட்டுதான் உறக்கம். அது தியானம் மருந்து அபினுக்குள் இருக்கும் தூக்கம். இந்த ஒடியனுடைய பிரதியை அரிதுயில் நிலைக்குக் கொண்டுசெல்வதன்மூலம் ஜாடிக்காரி பாலத்தீனா “தி 'காக்கரீஸ் அன் க்ரோ ஆஃப் ஒடியன்” நூலைத் திறக்கிறாள். அவளால் காணமுடியவில்லை. ஒல்லாந்த மாணாக்கியரும் திறக்கமுடியவில்லை. டாக்டர் நிக்கோலஸ் துல்ப் ஓவிய இருட்டிலிருந்து மெய்யொளியில் மெல்லப் படர்கிறார் ஒடியன் தூக்கத்தில். நிறங்கள் உறக்கத்தை நோக்கி மெய்யுருகி உருவழிந்து சிருஷ்டியாவதை உணரக்கூடும். திறந்தவிழிகளால் கலையைப் பார்க்கமுடியவில்லை. மூடிய இமைமீது கலை வரையப்படும். கண்ணைத் திறந்தால் கலை மறைகிறது. குருவாடிக் கழுதையைவிட வண்ணானின் சாயம்போன காட்டுத்துணிகளின் கிழிசல் பட்டும்படாமல் ஒருங்கிசைவில் சித்திரத்துகிலுக்கு முந்திய எச்சமாகிறது. சொக்கை வண்ணானும் கட்ட ஒடியனும் செம்மறிக் கிடாச்சண்டைக்கு ஏகும் மலைக்கிராமப் பாதை. கழுதையுடன் தூங்கிநடக்கும் ஒடியனை மலைக்குத் தெரியும். ஆளில்லாத இடத்துக்குச் செல்லும் குருவாடிக்கழுதைமேல் ஒடியன் சேவல் போருக்குச் செல்கிறான். குழிகள் சுழன்று வருகிற ஆழ்ந்த காயங்கள் உடைய ஆறு, முடுகரைக்கு அந்தப்பக்கம் ஒடுமரங்கள் நிறைந்த மலையூர், அருகில் ஒடுங்காடு தான் அவன் பூர்வமண்மம். ஆசினிப்பலா மரங்களையுடைய ஓடுங்காடு பார்த்து கெக்கலித்தான் ஒடி. அம்புக்கட்டுகளோடு இடுப்பில் துடி தொங்கும்.... துடித்துத் தட்டிய துடிக்குரல் கேட்டு பட்சிகள் கலைந்துபறந்தன சுற்றி. ஓடுங்காடு கடந்து அவன் உடல்போகாமல் நடந்தபடி தூங்கவாரம்பித்தான். தூக்கத்தில் நரைக்கொடி மணம். ஒடியல் வேரடியில் காலம் தூங்கிக்கொண்டு இருந்தது. பழங்கதையின்படி சிடாயுவின் வழித்தோன்றலாய் சிறு அரசன் புள்ஒடி விநதையைச் சீயாளென்பான். அரணன் அரம்பையைக் கூடியதில் சம்பாதியும் சிடாயும் பண்டு இருந்தே கழுகுலகம் மனிதரைக் கடந்திருப்பதில் புள்ளுநூல் அறிவீர். பகுத்தறிவின் கிரகச் சுழற்சியினை சிடாயு தம் இரு சிறகால் தொட்டு நிறுத்திவிட உள்ளே பெருஞ்சுழற்சியாய் ஒடிகிரகத்துக்கு வளைந்து பறப்பதில் வலியபரந்த சிறைநிழலில் செல்லும்படி ஆகாயநெறியே நாம் இவ்வேளை பறந்துகொண்டு இருக்கிறோம். சிடாயுடலில் கூடுமாறிச்செல்லும் பலவின்பால் பிறவிகளில் ஒடி இனவரைவியலில் “தி க்ரோ ஆஃப் ஒடியன்என்றழைப்பதில்பால்த்தீனாதம்வழிவந்தஜலப்பிரளயத்தில்திக்ரோஆஃப்நோவாவிலிருந்து கிருஸ்தவ ஊழியுடன் முதல் காக்கையை படகிலிருந்து நோவா பறக்கவிட்டதில் தொடங்கிக் கடந்து நேரில் தேடிப்போக ஆவலுற்றாளாம். மேலும் ஒடி கல்லளை ஓவியங்களில் அதீதப் பழம் புள்ளுக்களும் புராண தாந்த்ரீக விதவை அரக்கி தண்டகாரண்யத்தில் ஜனஸ்தானமென்னும் இடத்திற் குடிபுகுந்த்தால் அவள் இரத்தநரகி, பூருவ இருடி மூக்கையும் காதுகளையும் அறுத்து சிக்ஷித்து முலையறுத்த இரத்தக்குகை மடு தீராமல் சித்திரம் வழிந்தது. வாதையுறு மூதாய் அவகதியடைந்த துயர ஊற்று எம் கலையாவதென ஒடி சித்தரித்த எத்தீய ஆவிகளும் தனியுலகாகும் பரப்பில் வெளியே தொலைவில் சூர்ப்பனகை மூக்கில் ஒழுகிய குருதி உடுக்களாய் சிதறிச்செவ்வொளிகாட்டி யாவும் விலங்குருப் புள்ளு எலும்புகளின் சேட்டை. ஒடிப்புதிரில் கல்லாத்தி எனும் இளம்பறவை எந்நேரமும் பாடுகிறது யாருக்காகவுமின்றி. கல்லாத்திப் பறவைக்கு பவளக்கூண்டு முடைந்து அழுகுரலிடும் பாடலை திரும்பவும் பாடினான் கட்ட ஒடியன்.
அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்
--------------------------------------------------------------------------

                                       (ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

கணிப்பின் புள்ளிகளைத் தாண்டிச் சுழலும் ஒரு படைப்பின் இயங்குதளத்தை அதன் கர்த்தாவே உணராத வேறொரு கோணத்தையும் வேறொரு வடிவத்தையும் பார்வையாளருக்கோ வாசகருக்கோ உணர்த்துவதும் அவரை படைப்பின் இன்னொரு பங்குதாரராக மாற்றி அதை அவருக்கானதாக்கிக் கொடுத்துவிடுவதோ எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால் இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் அப்படிப்பட்ட ஆளுமைகள் தொடர்கிறார்கள். அவர்களின் மூலம் கலைத் தன்னுடைய மாய எதார்த்தங்களை அடைந்து அவர்களிடமிருந்துப் பிரிந்து ஒரு பறவைக் குஞ்சைப் போல பல இடங்களை அடைந்து இறுதியில் தனக்கான ஓரிடத்தை அவை பெற்றுவிடுகின்றன.







மனித வலிகளையும் அவர்களின் அகம் சார்ந்த இச்சைகளையும் அவர்களின் அறம் கூடிய கனமான வாழ்வின் உன்னதங்களையும் ஒரு நொடியில் உறைய வைக்கும் ஆற்றல் கலையின் அடர்ந்த தன்மைக்கும் அதன் இருண்மைக்கும் உண்டு. இருண்மையை வேண்டுமென்றே உருவாக்காமல் அது உருவாகும் தருணத்திற்காய் காத்திருந்து அதில் தன்னிலைகளையும் சமூக நிலைகளையும் குழைத்து உருவாக்கப்படும் எழுத்துப் பிரதியோ ஓவியமோ காலத்தின் மாறுதல்களோடே மாறுதல்களை அடைந்து அது தன் ஒளியை வீசுவதாகவே இருக்கிறது என்பது எப்போதும் கலையின் இயங்கியலில் சாத்தியமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அத்தகைய சாத்திய கலை வடிவங்கள் சிறுபத்திரிக்கைச் சார்ந்தோ அல்லது சிறுக்குழுக்களாக இயங்கியோ வளர்கின்றன. உருவாக்கப்படுகின்றன. அவை புறச்சூழலை நோக்கி வருகையில் மீள் உருவாக்கங்களும் மீட்டெடுத்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒரு கலை வடிவத்தை இன்றைய சிறுபத்திரிகைகள் பல வற்றில் ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி காண முடிகிறது.

ஞானப்பிரகாசம் ஸ்தபதி தன் ஓவியங்களில் பயன்படுத்துகிற இருளும் ஒளியும் மிகவும் நேர்த்தியான ஒரு சிற்பியின் தன்மையில் வெளிப்படுகிறது. அதனால் அவரின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் பல சிற்பத்தன்மையை வீசுகின்றனவாக இருக்கின்றன. கலையில் புதுமரபாக அது வாய்த்திருக்கிறது.

அவர் பயன்படுத்தும் கோடுகள் எல்லாம் அவற்றின் புதிய அவதாரமாக அவரால் அதிகற்பனையில் சொல்ல முடிகிறது. உலகின் எல்லாப் பொருட்களும் இயற்கையாக மனிதப் பயன்பாட்டிற்குத்தான் என்னும் படைப்பின் ஆதாரத் தத்துவம் அல்லது இயற்கையின் மூலம் என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி பல ஓவியங்களில் உணர முடிகிறது. எந்த உருவங்களை அவர் தன் ஓவியப் பிரதியில் வரைந்தாலும் அது எங்காவது மனிதருடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது என்பது என்னுடைய அவதானம்.



மனிதர்கள் அற்ற கலையின் பயன் எதுவுமில்லை. மனிதர்களின் பிரதிபலிப்பாக ஞானப்பிரகாசம் ஸ்தபதி உருவாக்கும் ஒவியங்கள் சொல்லப்படும் கருத்துகளுக்கானது மட்டுமல்ல அதையும் தாண்டி அந்த ஓவியங்கள் பேசப்படுவனாக இருக்கின்றன. சமீப காலங்களில் வெளிவந்திருக்கிற அவரின் ஓவியங்களைக் காணுகையில் கவிதைக்களுக்கானதும் கதைகளுக்கானதும் என்றில்லாமல் அது தன்னியல்பாக இன்னொரு பரிமாணத்தில் இயங்குகின்ற ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.

அவரின் வாழ்வுப் புரிதலும் வாழ்க்கையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அவநம்பிக்கை சக மனிதனை அவர் பார்க்கும் பார்வை அதிலிருந்து அவருக்குக் கிடைக்கும் தரிசனங்கள் இவற்றைக் குழைத்து அவர் ஒரு கவிதைக்காய் வரையும் ஓவியம் கவிதையைத் தாண்டி பல சிந்தனைகளைத் தூண்டுகின்றனவாக இருக்கின்றன.

அவரின் கோட்டோவியங்கள் எல்லாம் மெல்லியதும் தடிமனானதுமானக் கோடுகளால் ஆனவை. அவற்றின் வேறுபாடு, அவற்றிற்கிடையே அவர் வைக்கும் இடைவெளி ஆகியவை ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை அடைவதற்கு ஏதுவானதாக இருக்கிறது.

கோட்டோவியங்களை அவர் உருவாக்கும் பாணியை அவர் கண்டடைந்து உள்ளார் என்பதை அவரின் ஓவியங்களிலிருந்து அறியலாம். நிழலிருந்து வெளிச்சத்திற்கும் வெளிச்சத்திலிருந்து நிழலுக்கும் ஊடு பாவும் ஒரு தாவல் நிலையில் அவருடைய கோட்டோவியங்கள் அமைந்திருக்கும். சமீபத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் எழுத்தாளுமைகளின் கோட்டோவியங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

நவீன உருவங்களை உருவாக்குவதில் கூட அவருக்கென தனி வழியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி இருண்மைகளாலும் ஒளிர்மைகளாலும் அதீதம் காட்டும் ஓவியக்கலைஞன் என்பதாகும்.

                                                                 யாழன் ஆதி
                                                              -----------------------

மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...