Monday, 13 April 2015

உலகின் கண்கள்

                                                               எஸ் ராமகிருஷ்ணன்
•••
அசரியா மலையில் உள்ள குகை ஒவியத்தை பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா. அந்த ஒவியத்தை  வரைவதற்காக நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த குகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், 
இன்று வரை அவ்வோவியத்திலுள்ள ஒரு தாமரை மொக்கினை கூட என்னால் நகலெடுக்க முடியவில்லை, இந்நாள் வரை அந்த ஒவியத்தை நான் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வரைந்துவிட்டேன், ஆனால் எனது ஸ்கெட் பேடில் அந்த ஒவியத்தின் ஒற்றைக்கோடு கூட பதிவாகவில்லை,  
இதை எப்படி விளக்கிச் சொல்வது, 
உண்மையில் நான் சொல்லப்போகிற விஷயத்தை வெறும் கதை என்று நீங்கள் ஒதுக்கிவிடவும் கூடும், ஆனால் கதைகளை விடவும் உண்மை, மிகவும் விந்தையானவை, 
எல்லா விசித்திரங்களும் வாழ்விலிருந்தே உண்டாக்கபடுகின்றன, கதைகள் வெறும் நிழல்களே.
அசரியா ஒவியத்தை கண்ணால் பார்ப்பது எளிதானது, ஆனால் அதை நோட்டில் வரையத் துவங்கினால் மறுநிமிசம்  மறைந்து போய்விடுகிறது, புதிராகயிருக்கிறதில்லையா, 
நான் அதை புதிர் என்று சொல்லமாட்டேன். விந்தை என்றே சொல்வேன், உண்மையில் அது ஒருவகையான ஈர்ப்பு , இல்லாவிட்டால் இத்தனை ஆண்டுகள் இந்த குகையினுள் ஏன் நான் அடைபட்டுகிடக்கிறேன், 
எனக்கு இந்த ஒவியம் அலுத்துப் போகவில்லை, ஒவ்வொரு நாளும் இந்த ஒவியம் எப்படி உருமாறப்போகிறது என்பதை காண்பதற்காகவே நான் இங்கிருக்கிறேன், இந்த அனுபவம் தொடர்ச்சியாக ஒரு கனவை காண்பதைப் போலவே இருக்கிறது, 
வாழ்வின் விசித்திரங்கள் எளிமையாக தான் துவங்குகின்றன, ஏதோவொரு புள்ளியில் விசித்திரமே போதும் என சிலர் தங்களை ஒடுக்கிக் கொண்டுவிடுகிறார்கள், நான் அப்படி பட்டவன் தான், எனக்கு இந்த ஒற்றை ஒவியம் போதுமானதாகயிருக்கிறது, 
உலகின் மாபெரும் இயக்கத்தை விடவும் இந்த ஒவியத்தில் நாளை என்ன நடக்கப்போகிறது என்பது எனக்கு முக்கியமாக தோன்றுகிறது, 
இவ்வளவு தான் வாழ்க்கை, 
எதை நாம் கவனப்படுத்துகிறோமோ, அதுவே நமக்கு சந்தோஷம் தருவதாக மாறிவிடுகிறது, போதுமானதாகிவிடுகிறது, உலகின் பார்வையில் நான் வீணாகிப்போனவன், ஆனால் எனக்கு உலகைப் பற்றி கவலையில்லை, நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். 
வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள ஒரு ஒவியம் போதும், ஒரு கவிதை போதும், ஒற்றை வரி போதும், ஏன் ஒரு சொல் கூட போதும் தானே.
நான் ஐரோப்பாவில் ஒவியம் பயின்றவன், உலகின் மிகச்சிறந்த ஒவியக்கூடங்களை கண்டிருக்கிறேன், நான் ஒவியம் பயில வேண்டும் என அப்பா மிகவும் விரும்பினார், அந்த விரும்பத்திற்கான காரணம்  அசரியா குகை ஒவியம், 
அப்படியான ஒரு ஒவியத்தை நான் வரைய வேண்டும் என்று அப்பா விரும்பியிருக்க கூடும், அதைப்பற்றி என்னிடம் சொன்னதில்லை. ஆனால் தகப்பனின் விருப்பங்கள் தானே பிள்ளைகளின் கனவாக உருமாறுகின்றன.
நான் ஐரோப்பாவிற்கு ஒவியம் பயில செல்லும் முன்பு அந்த ஒவியத்தை ஒருமுறை காண விரும்பினேன், அப்பா அதை அனுமதிக்கவில்லை
முதலில் ஒவியப்படிப்பை முடித்துக் கொண்டு வா, நானே அழைத்துப் போகிறேன் என தடுத்துவிட்டார்
நான் ஏழு ஆண்டுகள் ஐரோப்பாவில் ஒவியம் பயின்றேன், நிறைய ஒவியங்கள் வரைந்தேன், அதில் சில முக்கிய ஒவியக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன, ஒவ்வொரு ஒவியம் வரையும் முன்பாகவும் அப்பா அசரியா குகை ஒவியம் பற்றி சொல்லியதே என் மனதில் ஒடும் 
எனது அப்பா டேவிட் செல்லதுரை காட்டிலாக்காவில் வேலை செய்தவர். மலைப்பளியர்களுடன் சிலமுறை அந்த குகைக்குப் போயிருக்கிறார். தனது காட்டிலாக்கா வேலையில் கிடைத்த அரிய பரிசு என்றே அந்த அனுபவத்தை பற்றிக்கூறுவார்
அப்பா அடிக்கடி அசரியா குகை ஒவியத்தை பற்றி பேசிக் கொண்டேயிருப்பார், அதை பற்றி சொல்லத்துவங்கும் போது அவரது கண்கள் ஒளிர ஆரம்பிக்கும், புலியை நேரில் கண்டவன் விவரிப்பதை போல அத்தனை துடிப்போடும் வியப்போடும் அவ்வோவியத்தை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார்
அந்த குரல் என் காதில் இன்றும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது, 
அப்பா இப்படித்தான் துவங்குவார்
``பச்சை வண்ணத்தில் தாமரைகள் மலர்ந்திருக்கும் குளம், பச்சை என்றால் அடர்பச்சை, பாசி படர்ந்த பச்சைநிறம், கையில் தொட்டால் ஈரமாகிவிடுவது போன்ற தண்ணீரின் அலைதல், அதில் நீந்தும்  மீன்கூட்டம், சரியாக சொல்வதாகயிருந்தால் பதினோறு மீன்கள், அந்த மீன்களுக்கு நடுவில் நீராடிக் கொண்டிருக்கும் மூன்று இளம் பெண்கள், அடர்ந்த கூந்தலும், சந்தனப்பதுமைகள் போன்ற உடல்வாகும், மெலிந்த கைகளும் உடுக்கு போன்ற இடையும் கொண்ட பெண்கள், நீந்தும் பெண்களை மரக்கிளை ஒன்றிலிருந்து எட்டிப்பார்க்கும் குட்டிக்குரங்கு ஒன்று. அதன் கண்களில் வெளிப்படும் வியப்பு, மரக்கிளை காற்றில் அசைந்தபடியே இருக்கிறது, 
அவ்வோவியம் குகையின் வலப்பக்க சுவரில் வரையப்பட்டிருக்கிறது. அது வெறும் ஒவியமில்லை, உயிருள்ள ஒரு கனவு.
மலைப்பளியர்கள் அந்த ஒவியத்தை கடவுளே வரைந்து போனதாக கூறுகிறார்கள், அந்த ஒவியத்தின் விசித்திரம், நீராடும் மூன்று பெண்களும் இடம் மாறிக் கொண்டேயிருப்பார்கள் என்று ஒரு பளியன் சொன்ன போது அது வெறும் கட்டுக்கதை என்று தான் நினைத்தேன், ஆனால் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வேறுவேறு நேரங்களில் அந்த ஒவியத்தை நெருக்கமாக கண்ட போது பளியன் சொன்னது உண்மை என்பதை அறிந்து கொண்டேன்
முதன்முதலாக கண்ட போது மூன்று பெண்களில் நெற்றியில் குழல்விழந்த பெண்ணின் தலை நீருக்குள் மேலே எட்டிப்பார்த்தபடியே இருந்தது மற்ற இரண்டு பெண்களும் தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருந்தார்கள், அவர்களின் முதுகுமட்டுமே வெளியே தெரிவதாகயிருந்தது, 
ஆனால் இரண்டாவது முறை அந்த ஒவியத்தை காணச்சென்றபோது இரண்டு பெண்களின் தலைகள் நீருக்கு வெளியே எட்டி நின்றன, முதல்பெண் தண்ணீருக்குள் முதுகு தெரிய நீந்திக் கொண்டிருந்தாள்
அது எப்படி வரையப்பட்ட ஒவியம் ஒன்று தனக்கு தானே உருமாறிக் கொண்டுவிடுமா என்ன,  குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன், 
மூன்று பெண்களும் ஒரே உடலமைப்பில் இருந்தார்கள், நீருக்கு வெளியே எட்டிப்பார்க்கும் பெண் முகத்தில் மெல்லிய சிரிப்பு படர்ந்திருந்தது. முதுகை காட்டிய பெண்ணின் கைகள் ஒரு தாமரை மொக்கினை பற்றியிருந்தன. பெயரில்லாத இந்தப் பெண்கள் யார், இவர்கள் யாரோ ஒருவரின் கற்பனையில் பிறந்தவர்களில்லை, நேரில் நீராடும் போது பார்த்த வரைந்த உருவங்களை போலவேயிருந்தார்கள், 
அந்த பெண்கள் மட்டுமில்லை, மரத்தில் நின்றிருந்த குரங்கின் கண்கள் கூட துல்லியமாக வரையப்பட்டிருந்தது, ஆள் வந்து போக முடியாத இந்த மலைக்குகையில் யார் இதை வரைந்திருப்பார்கள், பளியர்கள் அந்த மூன்று பெண்களை வனதாரகைகள் என்று கூறினார்கள், 
அது உண்மை தான், அவர்கள் மானுடப்பிறவிகளில்லை, வானிலிருந்து வந்தவர்கள் போல அழகு. வசீகரமும் கொண்டவர்கள், அந்த ஒவியத்தை என் வாழ்நாளில் மறக்கவேமுடியவில்லை``
அசரியா ஒவியம் பற்றி அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போது காற்றில் அவரது கைகள் அந்த ஒவியத்தை வரைந்து கொண்டிருக்கும், எவ்வளவு தான் சொன்னாலும் அதை கண்முன்னே காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் சொல்வார்
``நான் சொன்னது அதன் வெளித்தோற்றம், ஆனால் அது மட்டும் அந்த ஒவியமில்லை, அது ஒரு விசித்திரம். கர்ப்பத்தில் சிசு வளர்வது போல அது ஒரு ரகசியம். எப்படி சொல்வது எனத் தெரியவில்லை, அந்த ஒவியத்தை ஒருமுறை பார்த்தவன் அதன் அழகில் மயங்கி பித்துபிடித்தவன் போலாகிவிடுவான், உலகில் வேறு எந்த அழகான பெண்ணைக்கண்டாலும் இவ்வளவு தானா அழகு என்று ஏளனமாகவே பார்ப்பான், அந்த மூன்று பெண்கள் என் மனதில் நீந்திக் கொண்டேயிருக்கிறார்கள், அந்த அனுபவத்தை சொல்லி விளங்க வைத்துவிடவே முடியாது, உணர வேண்டும், நான் உணர்ந்திருக்கிறேன், எட்கர் ஆலன் உணர்ந்திருக்கிறார், பளியர்களுக்கு தான் நான் நன்றி சொல்வேன் 
அப்பா அந்த ஒவியம் பற்றி சொல்லிமுடித்தவுடன் புகைக்க துவங்கிவிடுவார், அதன்பிறகு ஒரு வார்த்தை கூட பேசமாட்டார், மௌனமாக புகைத்துக் கொண்டேயிருப்பார், பலஆயிரம் மைலுக்கு அப்பாலிருந்த குகையை வீட்டிலிருந்தபடியே நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது போலவே அவரது தோற்றமிருக்கும், சில சமயம் தன்னை அறியாமல் அவர் கண்ணீர்விடுவார்
அப்படி சொல்லி சொல்லித் தான் எனக்கு அந்த ஒவியத்தை காண வேண்டும் என்ற ஆசை தீவிரமானது, 
ஐரோப்பாவிலிருந்து திரும்பியதும் நான் அந்த ஒவியத்தை காண்பதற்காக அசரியா போய்வர வேண்டும் என திட்டமிட்டேன், அப்போது அப்பா உடல்நலமில்லாமல் இருந்தார், 
அவரிடம் நான் அசரியா போக வேண்டும் என்ற போது அவர் வேண்டாம் என மறுத்தார்
இல்லை அதை அவசியம் பார்த்தேயாக வேண்டும் என்றேன்
அப்பா என்னிடம் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தார்
நீ அசரியாவிற்கு போய்வா, ஆனால் அந்த ஒவியத்தை நகலெடுக்க முயலாதே, உன்னால் அதிலிருந்து விடுபட முடியாது 
அப்பா சொல்லும் போது அது தேவையில்லாத அறிவுரை என்று மட்டுமே தோன்றியது, ஆனால் அவர் சொன்னது முற்றிலும் நிஜம், ஒருவேளை நான் கண்ணால் பார்த்துவிட்டு மட்டும் வெளியேறிப் போயிருந்தால் என்றோ இந்த குகையை விட்டு போயிருப்பேன்,  ஆனால் அதை நகல் எடுக்க துவங்கியது தான் இத்தனை ஆண்டுகளாக என்னை இங்கே தங்க வைத்திருக்கிறது
•••
அசரியா ஒவியத்தை நான் மட்டுமில்லை, யார் யாரோ நகலெடுக்க, புகைப்படம் எடுக்க முயன்றிருக்கிறார்கள், ஆனால் எந்த வடிவத்திலும் அதை பதிவு செய்ய இயலவில்லை, ஒருவரின் கனவை மற்றவர் நகலெடுக்கவோ, பதிவு செய்யவோ முடியாது தானே, 
ஆனால் எனது மனம் அவ்வளவு எளிதாக முயற்சியை விட்டுவிடவில்லை, என்றாவது நான் அந்த ஒவியத்தை வரைந்து தீருவேன் என உறுதியாக நம்பினேன், 
அந்த நாளுக்காக தான் இங்கே காத்திருக்கிறேன், 
முன்பு என்னோடு துணைக்கு பளியர்கள் இருவர் உடனிருந்தார்கள், இப்போது காடு எனக்கே பழகிவிட்டது, நானாக தனியே சுற்றிக் கொண்டிருக்கிறேன், நாட்கணக்கில் மணிக்கணக்கில் அந்த ஒவியத்தின் முன்னே நின்று கொண்டேயிருக்கிறேன், நீந்தும் மூன்று பெண்களும் இப்போது என்னை நன்றாக அறிவார்கள், அந்த குரங்கு குட்டியும் என்னை அறியும், என்றாவது கனியப்போகும் தருணம் ஒன்றுக்காக நான் காத்துக் கொண்டேயிருக்கிறேன்
••
என்னை போலவே தான் எட்கார் ஆலனும் இதே ஒவியத்தின் முன்பாக  காத்துக் கொண்டிருந்திருக்கிறார். காட்டிலாக்காவின் உயரதிகாரியான ஆலனிடம் அசரியா ஒவியத்தை பற்றி அப்பா சொன்ன போது அவர் கேட்ட முதல் கேள்வி
அந்த ஒவியம் வலப்பக்க சுவரிலிருக்கிறதா  
ஆமாம் துரை, எட்டு அடி அகலமும் பனிரெண்டு அடி நீளமும் உள்ள ஒவியம்,  என்றார் அப்பா,
அதிகாரிகளிடம் அவ்வளவு துல்லியமாக சொன்னால் தான் நம்புவார்கள் என அப்பாவிற்கு தெரியும், 
எட்கர் ஆலன் ஏதோ யோசனையில் இருந்தவரைப் போல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார், பிறகு அப்பாவிடம் அதில் மூன்று பெண்களின் உருவம் மட்டும் தான் இருக்கிறதா எனக்கேட்டார்
ஆமாம், மூன்று பெண்கள், அவர்கள் உடல்வாகு ஒன்று  போலவே இருக்கிறது
புத்தரின் உருவமோ, சிற்பமோ ஏதாவது அங்கிருக்கிறதா என ஆலன் மறுபடியும் கேட்டார்
அப்படி எதையும் காணவில்லை துரை, 
அந்தப் பெண்களின் கண்கள் திறந்திருந்திருந்தா என எட்கர் கேட்டார்
சரியாக கவனிக்கவில்லை. ஆனால் மெல்லிய சிரிப்பு உதட்டில் படிந்திருந்தது
மரக்கிளையில் ஒரு குரங்கு இருந்ததா என ஆலன் மறுபடியும் கேட்டார்
ஆமாம், உண்மையில் அது ஒரு குரங்கு குட்டி என்றார் அப்பா
அதுவே தான், இந்த விசித்திர ஒவியத்தை பற்றி வாசித்திருக்கிறேன், மிகைல் வாலன்டின் இதைப்பற்றி எழுதியிருக்கிறார் என்றார் எட்கர்
யார் வாலன்டின் என அப்பா கேட்டுக் கொள்ளவில்லை
எட்கர் ஆலன் அதன் மறுநாளே குகை ஒவியத்தை காண்பதற்காக அப்பாவை உடன் அழைத்துக் கொண்டு மூன்று பளியர்களை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு கிளம்பினார்
எட்கர் உடன் அப்பா சென்றிருந்த நாளில்  அந்த ஒவியத்தில் மூன்று பெண்களும் தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருந்தார்கள், அவர்களின் முகம் தெரியவில்லை, முதுகுகள் மட்டுமே தெரிந்தன, இது என்ன விந்தை, தண்ணீருக்கு வெளியே எட்டிப்பார்த்த இரண்டு முகங்கள் எப்படி தண்ணீருக்குள் மறைந்து போயின. ஆலன் ஒவியத்தை நெருங்கி நின்று பார்த்தபடி மெய்மறந்து நின்றிருந்தார் பிறகு தனது பையில் இருந்த டார்ச் லைட்டை எடுத்து வெளிச்சம் குறைவாக இருந்த பகுதியில் அடித்து எதையோ தேடுவதை போல ஒவியத்தை உற்று கவனித்தபடியே இருந்தார், 
அவரது உதடுகள் வியப்பில் கிரேட் வொண்டர் என முணுமுணுத்துக் கொண்டன, கண்களால் அந்த ஒவியத்தை விழுங்கியபடியே அவர் நீந்தும் பெண்களின் முதுகை கவனித்தபடியே இருந்தார், பிறகு பெருமூச்சிட்டபடியே அப்பாவிடம் சொன்னார்
நிகரில்லாத ஒவியம். இதை வரைந்தவன் மகத்தானவன், ஆனால் அவன் ஒரு துறவி. நிச்சயம் துறவியே தான்
அதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறார் என அப்பாவிற்கு புரியவில்லை, அவர் தலையாட்டியபடியே தண்ணீர் அசைவது போலவே இருக்கிறது என விரலால் சுட்டிக்காட்டினார்
எட்கர் சந்தோஷத்தின் உச்சத்தை அடைந்தவரைப் போல சொன்னார்
மிகைல் வாலன்டின் இந்த ஒவியம் பற்றி கேள்விபட்டு இதைக்காண்பதற்காக காட்டினுள் பல ஆண்டுகள் அலைந்து திரிந்திருக்கிறார். அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை, அதைப்பற்றி தனது பயணக்குறிப்பில் எழுதியிருக்கிறார், எனது அதிர்ஷடம் நான் எளிதாக பார்த்துவிட்டேன்  இது வெறும் ஒவியமில்லை, மகத்தான தரிசனம் என்றபடியே ஒவியத்திலுள்ள மரத்திலிருந்து எத்தனை இலைகள் கிழே உதிர்ந்து கிடக்கின்றன என எண்ண ஆரம்பித்தார் எட்கர்
அப்பாவிற்கு எட்கருக்கு ஒவியம் பிடித்துப் போனது மகிழ்ச்சி அளித்த்து, உயர் அதிகாரிகளுக்கு சந்தோஷத்தை உருவாக்கினால் தான் பதவி உயர்வும் அதிகாரமும் கைக்கு வரும் என அப்பாவிற்கு தெரியும்
இது ஒரு உயிருள்ள கனவு, ஒரு வாரம் காலம்  இந்த குகையினுள் தங்கி இதை அனுபவிக்க வேண்டும் என்றார் ஆலன்
அப்பா உடனே அதற்கு ஏற்பாடு செய்யத்துவங்கினார். எட்கர் குகையில் தங்கிக் கொண்டார், இருட்டத்துவங்கிய போது குகையின் இயல்பு உருமாறியது, அவர்களை விழுங்கிக் கொண்டு  வாயை மூடிக் கொண்டுவிட்ட மலைப்பாம்பு ஒன்றை போல இருந்தது அக்குகை. அப்படியொரு அடர்ந்த இருட்டை அவர்கள் கண்டதேயில்லை. ஆனால் அவ்வளவு இருட்டிலும் ஒவியம் ஒளிர்ந்து கொண்டேதானிருந்தது.
எட்கர் வியப்போடு இருட்டிற்குள் நின்றபடியே அந்த ஒவியத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார், பச்சை நிற ஒளியில் அந்த பெண்கள் தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருப்பதும் தாமரை மொக்குகள் அசைவதும் துல்லியமாக தெரிந்தன
எப்படி இது, எங்கிருந்து ஒளி வருகிறது, ஆலனுக்கு எதுவும் புரியவில்லை, ஆனால் அவர்கள் காலையில் பார்த்த போது மூன்று பெண் உருவமும் இப்போது தண்ணீருக்கு வெளியே எட்டி பார்த்தபடியே இருந்தன
ஆலன் அந்த பெண்களின் முகத்தை உற்று நோக்கினார்
என்னவொரு அழகு, எத்தனை வசீகரமான கண்கள், அடர்ந்த கூந்தல். கூர்மையான நாசி. சின்னஞ்சிறிய உதடுகள். அந்த உதட்டில் பீறிடுவது  பரிகாசம், தங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்பது போன்ற பரிகாசம்.
ஒரு வார காலம் அந்த ஒவியத்தின் விந்தையை அருகிலிருந்து பார்த்துவிட்டு அதைப் புகைப்படம் எடுப்பதற்காக மறுமுறை தனியே வந்திருந்தார் எட்கர் ஆலன். 
விதவிதமாக அந்த ஒவியத்தை புகைப்படம் எடுத்தார், தனது வீட்டிற்கு எடுத்துப் போய் டார்க் ரூமில் டெவலப் செய்தபோது ஒரு புகைப்படத்தில் கூட ஒவியம் பதிவாகவில்லை, எப்படி அது, அத்தனை புகைப்படங்களுமா வீணாகிவிட்டன, அவருக்கு குழப்பமாக இருந்தது, மறுமுறை அவர் தாம்சனையும் உடன் அழைத்துக் கொண்டு அசரியா சென்றார், 
இருவரும் மூன்று கேமிராக்களில் அந்த ஒவியத்தை புகைப்படம் எடுத்தார்கள், ஆனால் அப்போதும் அந்த ஒவியம் புகைப்படத்தில் பதிவாகவேயில்லை
எட்கர் பயந்து போய்விட்டார், கண்முன்னே தெரியும் ஒவியம் ஏன் புகைப்படத்தில் பதிவாக மறுக்கிறது. என்ன குழப்பமது, 
இதை சித்திரமாக வரைந்து கொண்டு போய்விடலாம் என அவர் மதராஸில் இருந்து லயோனலை அழைத்து வந்திருந்தார், 
லயோனல் அந்த குகை ஒவியத்தை நேரில் கண்டபோது கைகளை உயர்த்தியபடியே சொன்னார், 
``அற்புதம்.``
ஒவியத்தின் முன்பாக நின்றபடியே அதை நகலெடுக்க துவங்கினார், ஆறுமணி நேரத்தில் அதை நகலெடுத்து முடித்துவிட்டு அவர் தூரிகையை கழுவினார், தான் வரைந்த ஒவியம் எப்படியிருக்கிறது என்று காட்டுவதற்காக ஆலனை அழைத்து வந்த போது கேன்வாஸில் ஒன்றுமேயில்லை, வெறும் வெண்பரப்பு மட்டுமேயிருந்தது, இவ்வளவு நேரம் தான் வரைந்த ஒவியம் எப்படி மறைந்து போனது 
லயோனலுக்குப் புரியவில்லை, அவர் குழப்பத்துடன் தனது ஸ்கெட்பேடை எடுத்து அதே ஒவியத்தை பென்சிலால் வேகமாக வரைந்தார், கோடுகள் முழுவீச்சோடு தெறித்து ஒடின, ஆனால் அதிலும் ஒவியம் பதிவு பெறவேயில்லை
``எனக்கு பயமாக இருக்கிறது எட்கர்`` என்றார் லயோனல்
``இதில் பயப்பட ஒன்றுமில்லை, எல்லா நிகழ்வுகளும் தர்க்க அறிவிற்குள் அடங்கிவிடுவதில்லை``
``இது எப்படி சாத்தியம், எனக்கு புரியவில்லை``
``எனக்கும் புரியவில்லை தான், ஆனால் சாத்தியம் என்றே மனது தோன்றுகிறது``
``இந்தியா உன்னை நிறைய மாற்றியிருக்கிறது ஆலன்``
``விசித்திரங்களை இந்தியர்கள் எளிதாக ஏற்றுக் கொள்கிறார்கள், நம்புகிறார்கள், அது ஒருவகையான புரிதல்``
``புரிதல் இல்லை அறியாமை``
``அறியாமையில்லை, ஆழ்ந்த ஞானம். இந்தியர்கள் வாழ்க்கை விசித்திரங்களை உள்ளடக்கியதே, ``
``கண்முன்னே தெரியும் ஒவியம் ஏன் பதிவாக மறுக்கிறது. ``
``கண்முன்னே தான் என் நிழல் தண்ணீரின் மீது விழுகிறது, ஆனால் அது நனைவதில்லையே, அது ஏன்``
``அதுவும் இதுவும் ஒன்றில்லை எட்கர்``
``லயோனல் இந்தியக்கலைகளை அதன் தோற்றத்தை மட்டும் கொண்டு புரிந்துவிட முடியாது, ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு ரகசியம், ஒரு புதிர்மையிருக்கிறது, இயற்கையை நாம் அறியாத ஒரு கோணத்தில் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ரசிக்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள். ``
``இல்லை எட்கர், இந்தியக் கலைகளில் யதார்த்தத்தை விட கற்பனை அதிகமாக பயன்படுத்தபடுகிறது. அது மலினமான உத்தி``
``இந்தியர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையே கற்பனையில் தானே ஆழ்ந்துபோயிருக்கிறது, யதார்த்ததை முழுமையாக ஒருவன் உணரத்துவங்கினால் இந்தியாவில் அவனால் வாழமுடியாது``
``மகத்தான ஒரு ஒவியத்தை உருவாக்கி விட்டு அதை ஏன் இப்படி விசித்திரமாக்க வேண்டும், இது தான் இந்தியர்களின் பிரச்சனை``
``மகத்தானவை எப்போதும் புதிரானவைகள் தான் லயோனல். ``
``என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை, இந்த ஒவியம் நிகரற்றது ஆனால் இது தீவினையின் அடையாளம், `` 
``ஏன் அப்படி நினைக்கிறாய், தன்னை நகல்செய்யவே முடியாத ஒன்றாக அது உருவாக்கபட்டிருக்கலாம் தானே``
``அது எப்படி சாத்தியம்``
``அது படைப்பின் ரகசியம். ஒரு கூழாங்கல் எப்படி இத்தனை அழகுடையதாகிறது என யாருக்கு தெரியும் ``
``எதற்காக இப்படி ஒரு ஒவியம் வரையப்பட வேண்டும்``
``இயற்கை அப்படி பட்டது தான், அதில் நகலேயில்லை, எல்லாமும் ஒரிஜினல் தான், ``
``இந்த ஒவியம் இயற்கையின் மறுவடிவம் என்கிறாயா``
``அப்படித்தான் இதை ஒவியம் வரைந்திருக்கிறான்``
``இதை எப்படி தான் பிரதி எடுப்பது`` எனக்கேட்டான் லயோனல்
``இங்கே வந்து ஒவியத்தின் முன்னே நின்று மனதிற்குள் உள்வாங்கிக் கொள்வதை தவிர வேறு எந்த வடிவிலும் இதை வெளியே கொண்டு போக முடியாது. படைப்பின் உச்சம் இப்படிதானிருக்கும்``.
``நீ இந்தியனைப் போலவே பேசுகிறாய் ஆலன்``
``இந்தியர்களை தோற்றத்தை வைத்து எடைபோட்டுவிடாதே லயோனல், அவர்கள் எளிமையானவர்கள், ஆனால் புதிரானவர்கள். ``
``நான் இந்த ஒவியத்தை எப்படியாவது மறுமுறை வரைந்தே தீருவேன், என் மனதில் இது பசுமையாக பதிந்து போயிருக்கிறது`` என்றான் லயோனல்
எனக்கு நம்பிக்கையில்லை ஒருவேளை உன்னால் இதை வரைய முடிந்தால் அது நிச்சயம் இன்னொரு ஒவியமாக தானிருக்கும், இந்த ஒவியத்தின் நகலாக இருக்காது
லயோனல் தனது ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளமுடியாவன் ஆக மதராஸிற்கு கிளம்பி போனான், அதன் பிறகு அவன் வாழ்க்கை முழுவதும் இதை ஒவியத்தை மறுபடி வரைவதற்கு முயன்று கொண்டேயிருந்தான், பின் ஒரு நாள் அந்த முயற்சியை கைவிட்டு கப்பல் ஏறியபோது ஆலனுக்கு ஒரு கடிதம் எழுதினான்
``டியர் எட்கர் ஆலன், படைப்பின் உச்சத்தை எவராலும் நகலெடுக்கமுடியாது என்பதே உண்மை, என் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்``
ஆலன் தன் வாழ்நாள் முழுவதும் அந்த ஒவியத்தை யார் எப்போது வரைந்தார் என தேடிக் கொண்டேயிருந்தார், அப்படி தேடும் போது தான் அசரியா காட்டில் நாற்பது மைல்களுக்கு அப்பால் கிழக்கு பகுதியில் இருபத்தியோறு குகைத்தளங்கள் இருப்பதையும், அந்த குகைதளங்கள் ஒரே வரிசையில் செடிகொடிகள் அடர்ந்து போய் இடிந்து போன நிலையிலிருப்பதையும் கண்டுபிடித்தார், 
குகைகளை சுத்தம் செய்த போது விதவிதமான புத்தபிரதிமைகள் அந்த குகைசுவர்களில் செதுக்கபட்டிருப்பதை கண்டுபிடித்தார், ஆனால் எந்த குகையிலும் அசரியா ஒவியம் போல ஒன்றை  காணமுடியவில்லை, இந்த கண்டுபிடிப்பு ஆலனுக்கு பெரும்புகழை தேடித்தந்தது. ஆனால் இந்த குகைகளில் உள்ள சிற்பங்கள், ஒவியத்தை யார் உருவாக்கியது என அவரால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, 
அப்போது பௌத்த கலைவிமர்சகரான கிளாரா சிம்சன் என்ற பெண் பிரிட்டனில் இருந்து அசரியா குகையை காண வந்தவர் இந்த இடம் ஒரு கலைக்கூடமாக இருந்திருக்க வேண்டும், அருகில் எங்காவது புகழ்பெற்ற பௌத்த மடாலயம் இருந்திருக்கும் என ஆய்வின் போக்கினை திசைமாற்றம் செய்து வைத்தார். 
அதன் வழியாகவே எட்கர் ஆலன் பகுசேனனை பற்றி கண்டுபிடித்தார், பகுசேனனின் பெயர் பதினாறவது குகையில் உள்ள பட்டியலில் இடம் பெற்றிருந்தது, அவன் ஒரு இளந்துறவி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கலை பயில வந்தவன் புத்தபிரதிமைகள் செய்வதில் ஈடுபடு கொள்ளாமல் காட்டின் கிழக்கேயுள்ள அசரியா குகையை தேடி சென்று தனிமையில் தியானித்து வந்திருக்கிறான். 
தன்னை ஞானநிலையை அடையவிடாமல் தடுப்பவை மனதில் உள்ள காமமும் கனவுகளும் தான், அதை சதா ஆசை தூண்டிக் கொண்டிருக்கிறது அவற்றை  தன்னிடமிருந்து மொத்தமாக விலக்கிவிட வேண்டும் என அவன் எத்தனித்தான். 
ஆனால் கனவுகள் வராமல் தடுப்பதற்கு அவனால் இயலவேயில்லை, நினைவுகளும் கற்பனையும் தான் கனவுகளை தூண்டுகின்றன, கனவுகளும் இச்சைகளும் அற்ற மனதை உருவாக்க அவன் தீவிரமாக முயன்றான் அப்போது தான் அவன் இந்த ஒவியத்தை வரைய ஆரம்பித்தான் 
உலகம் ஒரு தாமரைக்குளம், ஆசைகள் அதில் நீந்தும் பெண்கள், மரக்கிளையில் உள்ள குரங்கு அவனது விழிப்புணர்வு. மரம் அவனது இருப்பின் அடையாளம், தாமரை அவனை ரட்சிக்க வந்த புத்தன், இப்படியாக அவன் மனவிசித்திரத்தை நாள் கணக்கில் அயாரமல் வரைந்து  முடிந்த போது அது தனக்குள் தானே இயங்க துவங்கியதை கண்டான்.
ஒவியத்தை காணக்காண மனம் களிப்படைந்தது
 இதுவே பௌத்த நிலை. இந்நிலையே போதுமானது. கலையின் வழியே மனம் அடையும் உச்சத்திற்கு நிகரேயில்லை, அவன் மனம் விம்ம ஒவியத்தை பார்த்தபடியே இருந்தான், பின்பு தனது பணி முடிந்துவிட்டது என்பது போல காட்டினுள் சென்றான். அதன்பிறகு என்னவாகினான் என்று யாருக்கும் தெரியாது.
பகுசேனனை பற்றிய இந்த செய்திகள் நிஜமா அல்லது எட்கர் ஆலன் உருவாக்கிய கதையா எனத்தெரியவில்லை, ஆனால் அதன்பிறகு இந்த ஒவியத்தை காண்பதற்காக ஏதேதோ நாடுகளில் இருந்தெல்லாம் கலை விமர்சகர்கள், ரசிகர்கள் வந்து போனார்கள், ஒருவராலும் அந்த ஒவியத்தை நகலெடுக்க முடியவேயில்லை
••
நான் பத்து ஆண்டுகளாக இந்த ஒவியத்தின் முன் நின்று அவதானித்தபோது இரண்டு விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறேன்
ஒன்று குளத்தில் நீந்தும் பெண்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதேயில்லை, இரண்டு ஒவியத்தில் உள்ள தாமரை கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்த முற்றாக மலரும் தருணம் இந்த ஒவியம் முழுமை அடைந்துவிடும், அந்த நாள் எப்போது எனத் தெரியவில்லை, ஆனால் அந்த நாளை சந்திக்கிறவன் பாக்கியவான், ஒருவேளை அந்த நாளில் என்னால் அந்த ஒவியத்தை வரைந்துவிட முடியும் என்றே தோன்றுகிறது
••
நான் சொல்பவை முட்டாள்தனமாகவும் நம்பமுடியாதது போலவும் உங்களுக்கு தோன்றக்கூடும், அபத்தங்களும் அற்புதங்களும், நம்பிக்கைகளும் முட்டாள்தனங்களும் ஒன்று சேர்ந்தது தானே கலையும், அதை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறவர்கள் தானே கலைஞர்களும்.
நான் அசரியாவில் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஒவியத்திலுள்ள தாமரைக்குளத்தினுள் மௌனமாக நீந்திக் கொண்டிருக்கிறார்கள் மூன்று வனதாரகைகள்
•••

No comments:

Post a Comment

                                  அண்ணன் "ச.முருகபூபதி" மிக முக்கியமான உரையாடல்.                                     ...