Sunday 10 June 2012

மாமிசம் தின்னி (361 இல் வெளியான செல்மா பிரியதர்ஸன் கவிதை)

(Drawing - Gnanaprakasam Sthabathy)


உன் மாமிசத்திலிருந்து வெளியேற்றிய மாமிசம் நான்
                      உன் மாமிசம் தின்று வார்த்தையாகிய மாமிசம் நான்
                           - மாமிசம் தின்னி

என் முள்கரண்டிகளில் உன் கண்கள்

வளர்த்த கோழிகள் முட்டையிடும்
பின்புறத்தில் பசி பழகினேன்.
நீதான் மீறிய என் பால்யத்திற்கு
முலைகளை அவித்து ஓடுரித்து தந்தவள்.

அன்பே நான் ஒரு  மாமிசம் தின்னி.
பிராயத்தின் என் நீளும் நாக்கிற்கு
வாணலியில் வறுபடும் உன் யோனி
தொடை இடுக்கைக் கீறிக் கொதிகலனிலிட்டு
அடிவயிற்றுக் கொழுப்பை அரிந்து
துண்டங்களுக்கு நடுச்சாந்தாக்கினாய்.
இளம் பசிக்கு நெருப்பில் வாட்டியவுன் செவிகள்.

அந்திப் பனை உச்சியிலமர்ந்து மொந்தைக் கள் பருக
உன் தலை கருக்கித் தோலுரித்த
மண்டையோடு ஒரு கோப்பைபோல்
ஒழுகி நிரம்பும் உன் குருதி ரசம்
அதில் என் இதழ்களின் முற்றாத போதைவெறி
அன்பே நான் ஒரு மதுப் பிரியன்.




போதை வளர்க்கும் மாமிச வெறிக்கு
நிணத்தில் வடித்த  உப்பில் ஊறவைத்த
குரல் நாக்கை ஊறுகாயாக்கி நக்கினேன்.
இடையுணவாய் பற்கள் பொடித்து
அக்குள் மயிர் நறுக்கித் தூவிய
உன் மசித்த மூளை.

நான் ஒரு மதுப் பித்தன்
எப்போதும் மாமிச வெறியன்
உன் ஈரல் கொறித்து
குருத்தெழும்புகளை உறிஞ்சிக் குடித்த பின்னும்
உடலின் பச்சை நரம்புகள் உருவி
நுழைத்துக் கழிவு கிழித்துப் பீய்ச்சி
கிண்டிய குடல் கூழில் தணியாதது என் தாகம்.

நீ என் மாமிசம் தந்தவள்
நான் உன் மாமிசம் தின்பவன்
உன் ரத்தப் போக்கை
ஆவி பறக்க வதக்கியுருட்டித் திண்ணும்
என் உடல் ஒரு பசியடங்காப் பாத்திரம்.


---------செல்மா பிரியதர்ஸன்.

No comments:

Post a Comment

மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...