Sunday 10 June 2012

பிசுபிசுத்த கனவுச் சித்திரம்

(Painting - Gnanaprakasam Sthabathy)


என் நித்திரையை அவள் வலியுறுத்திய பொழுது
இமைகளிடையே அமர்ந்திருந்த ஒரு சொல்லில்
தீட்டிய ஓவியத்தின் புருவமிருந்தது
பாதி மூடிய கண்களில் வாக்கியங்கள்
நீண்டிருந்தன தண்டவாளங்கள்போல்
தோன்றிய பெண் அசைய அசைய
தாள்களில் வாத்சல்யம் பெருகி
இலை நுனி வடிக்கும் ஒரு துளி நீராகி
ரம்மியத்தில் வீழ்ந்தேன்
கனவு காண அழைப்பவளின் குரலின்
நிர்பந்தத்தில் இமைதிறவா
உயிரற்றவள் நின்றிருந்தாள்
நெளிவு சுழிவுகளுள் சொற்களஞ்சியத்தின்
மூடியை மூட முற்றுப்பெறாத காட்சியை
கைவிட்டுப் பிரிந்தேன்
வெளிப்புறத்தில் எனக்குப் பதில் அழுத மழை
இருள் விரிப்பில் விழுந்த சிரத்தில்
பிரவகிக்கும் விடுபட்ட சொற்களில்
மனக்கண்ணில் பூர்த்தியாகும்
விழி அலர்ந்து அச்சித்திரம்
அகம் ஒருமித்து எண்ணங்களை கைவிட்டவேளை
அவள் அழைத்திருந்த நித்திரையின் 
ஆழத்திலிருந்தேன்
விழித்திருப்பவனுக்கு நான்
தூங்குவதாக எண்ணமிருக்கும்
நானோ அகக்கண்ணில் இமைத்திருந்து
கண் திறவா ஓவியத்தில்
சொல்லால் விழி திறந்திருப்பேன்
நதி மீறிய கரைவிழுந்த நீர்த்துளிகளின்
வேகத்தில் உயிர் துளிர்த்து
பசலையில் நெளிந்த உயிரிடையில்
விரல்களில் விரகம் வரைந்தேன்
சித்திரக் காகிதத்தில் உடல் நீர் கசிந்து
பிசுபிசுத்த வண்ணங்கள்.

-Iyyappa Madhavan

No comments:

Post a Comment

மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...