(Painting - Gnanaprakasam Sthabathy) 
குறைந்த கூலிக்கு
முந்திரிக்கொட்டை உடைப்பவளை
எனக்குத் தெரியும்
கடல் மீன்கள் விற்கும்
சந்தைக்கு வந்தால் புன்னகைப்பாள்
தூறல் நாட்களில்
மரச்சாலை வழியே
குடைபிடித்துப்போகும் அவளை
ஓயாமல் காதலிக்கிறான்
ஒரு குதிரை லாடம் அடிக்கும் பட்டறைக்காரன்
லாடக்காரன் என்னுடன் மதுக்குடிப்பான்
நீண்ட மழைக்காலத்தின் மத்தியில்
அவளை ஒரு முறை
உடலுறவிற்கென அழைத்தோம்
அவள் ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்
எருமைகளுக்கென வளர்ந்த
பசும் புற்சரிவில் பொதித்து
ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்
அந்தியில் கனத்த மலைத்தடத்தின் வழியே
குதிரையில் தானியப்பொதி ஏற்றி வந்த
அவள் கணவன்
ஏதோ தனக்கு மகளைப்போல்
பொறுப்பற்றுத் திரிவதாக
அவளை ஏசினான்
அவள் புன்னகை மிளிர
எங்களைச் சகோதரர்களென்று
அறிமுகப்படுத்தினாள்
அவன் சில ஆரஞ்சுப்பழங்களை
எங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தான்
இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே
அவள் கூந்தலை நீவி முடிச்சிட்டான்
அவன் தோளில் அவள் சாய்ந்து
விடைபெறும்போது
எங்களை இருள் சூழ்ந்திருந்தது
கைகளில் பழங்கள் மிருதுவாயிருந்தன.
- Yavanika Sriram 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment